சென்னையில் பழமையான சைக்கிள் கண்காட்சி; 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய சைக்கிள் இடம்பெற்றது
சென்னையில் நடந்த பழமையான சைக்கிள் கண்காட்சியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய சைக்கிள் இடம்பெற்றது. இந்த சைக்கிள்களை பார்வையிட்ட குழந்தைகள் குதூகலத்தையும், பெரியவர்கள் வியப்பையும் வெளிப்படுத்தினர்.
பழமையான சைக்கிள் கண்காட்சி
வாகன புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக மக்களின் பிரதான போக்குவரத்தாக இருந்தது மிதிவண்டிகள் எனப்படும் சைக்கிள் தான். போக்குவரத்துக்கு மட்டுமின்றி உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் காரணியாகவும் சைக்கிள்கள் பயன்பட்டன. காலமாற்றம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் புதிய வாகனங்கள் அறிமுகமானதை தொடர்ந்து, சைக்கிள் தனது அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்தன.
தற்போது உணவு பழக்கவழக்க மாற்றம், உடற்பருமன் பிரச்சினை, புதிய நோய்கள் பரவல் போன்ற காரணங்களால் சைக்கிள்கள் மீதான நாட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னை தினத்தையொட்டி, நகரில் பல கண்காட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், சைக்கிள்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் சைக்கிளிங் யோகிஸ் அமைப்பு சார்பில் சென்னை தீவுத்திடலில் சைக்கிள் கண்காட்சி நேற்று நடைபெற்றன. இதனை சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொழில் அதிபர் எண்ணாரசு கருணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மடக்கும் வடிவிலான சைக்கிள்
இந்த கண்காட்சியில் 2-ம் உலகப்போரில் (1939-1945) விமானப்படை வீரர்கள் பயன்படுத்திய மடக்கும் வடிவிலான 'பி.ஏஸ்.ஏ.' ரக சைக்கிள், இங்கிலாந்தில் 1897-ம் ஆண்டில் பிரபலமான 'பியர்ஸ்' ரக சைக்கிள் இடம்பெற்றிருந்தன. கரடு முரடான சாலைகளை எளிதாக கடக்கும் வகையிலான இந்த ரக சைக்கிள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மோட்டார் சைக்கிள்களின் முன்னோடியான 'ரட்ஜ்', இங்கிலாந்தை சேர்ந்த 'நார்ட்டன்' 'ஹெர்குலீஸ்', 'ராபின்ஹூட்', 1982-ம் ஆண்டை சார்ந்த 'டி.ஐ. ராலே', பெரிய முன் சக்கரங்களை கொண்ட 'பென்னி பார்த்திங்' உள்பட 50-க்கும் மேற்பட்ட மாடல்களில் பழமையான சைக்கிள்கள் கண்காட்சியில் அணிவகுத்து நின்றன.
இந்த சைக்கிள்களை பார்வையிட்ட பார்வையாளர்கள் அதன் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சைக்கிள்களின் வரலாறு குறித்து அதன் பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்து 'ஓல்டு இஸ் கோல்டு' என வியந்தனர்.
டைனமோக்கள், ஒளி விளக்குகள்
இந்த கண்காட்சியில் பெரியவர்கள் பயன்படுத்திய சைக்கிள்கள் மட்டுமன்றி குழந்தைகள் பயன்படுத்திய விதவிதமான 3 சக்கர சைக்கிள்களும் இடம்பெற்றிருந்தன. இந்த சைக்கிள்களை கண்டதும் குழந்தைகள் துள்ளி குதித்தனர். உற்சாகத்தில் அந்த சைக்கிள்களில் அமர்ந்து ஓட்டுவது பாவனை செய்து குதூகலித்தனர்.
இதுதவிர சைக்கிள்களில் இடம்பெற்றிருந்த டைனமோக்கள், மண்எண்ணெய் விளக்குகள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், நிறமாறும் ஒளி விளக்குகள், காற்றடிக்கும் பம்புகள், கையடக்க பழுதுபார்க்கும் சாதனங்களும் கண்காட்சியை அலங்கரித்தன.
முன்னதாக கண்காட்சியை தொடங்கி வைத்த அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
'சைக்கிள் டிரையல்ஸ்'
சென்னை, பல்வேறு நாட்டினரின் கலாசார தாக்கம் அடங்கிய நகரம். அதை வெளிக்கொணரும் வகையில் 'சைக்கிள் டிரையல்ஸ்' நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 'பொன்னியின் செல்வன்' டிரையல்ஸ் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும் வழித்தடங்களில் சைக்கிள்களில் சென்று விளக்கம் சொல்லும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புத்தகங்களில் படித்து தெரிந்து கொள்வதை விட, இதுபோன்ற நடவடிக்கைகளில் இன்னும் ஒரு படி மேலாக மக்கள் புரிந்துகொள்ள உதவும். வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்களை நேரில் காணும்போது, அது அனைவருக்கும் வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.
அந்த காலத்தில் சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்றால் போலீசாரிடம் அபராதம் கட்டவேண்டிய நிலை இருந்தது. கண்காட்சியில் உள்ள பழமையான சைக்கிள்களை பார்க்கும்போது அது நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பழமை மாறாமல் பராமரிப்பு
இதில் பழமையான சைக்கிள்களை காட்சிப்படுத்திய வெங்கடராமப் பிரபாகர் கூறும்போது, "என்னிடம் 40-க்கும் மேற்பட்ட பழங்கால சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றை பழமை மாறாமல் பராமரித்து பாதுகாத்து வருகிறேன். தற்போதைய சூழலில் இந்த வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் கிடைப்பது அரிது. எனவே இந்த சைக்கிள்களை பயன்படுத்தாமல் காட்சி பொருளாக பாதுகாத்து வருகிறேன்", என்றார்.
பழமையான சைக்கிள் பராமரிப்பாளர் கபிலன் கூறுகையில், "50 ஆண்டுகளுக்கு முன்பு எனது தாத்தா பயன்படுத்திய சைக்கிளை இப்போது நான் பயன்படுத்தி வருகிறேன். நல்லமுறையில் அந்த சைக்கிளை பராமரித்து வருகிறேன். இந்த சைக்கிளில் நான் வெளியே செல்லும்போது அனைவரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். இது எனக்கு பெருமையாகவே இருக்கும்", என்று குறிப்பிட்டார்.