அமெரிக்க மாப்பிள்ளை மோகத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த சென்னை இளம்பெண்; நைஜீரிய ஆசாமி கைது
முகம் காட்டாமல், முகவரி கொடுக்காமல் செல்போனில் இனிக்க, இனிக்க பேசி சென்னை இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை பறித்த நைஜீரிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
அயனாவரம் இளம்பெண்
இதில் பணத்தை இழந்த பெண் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர். இவருக்கு முதல் திருமண உறவு கசந்து போனது. எனவே அவர் மறுமணம் செய்ய விரும்பினார். இதற்காக திருமண இணையதள தகவல் மையத்தில் தனது செல்போன் எண் உள்பட விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் அவருடைய செல்போன் எண்ணுக்கு அமெரிக்காவில் இருந்து டாக்டர் அலெக்ஸ் பேசுவதாக அழைப்பு வந்தது.
அந்த நபர் இனிக்க, இனிக்க பேசினார். அவருடைய பேச்சில் அயனாவரம் பெண் மயங்கி போனார். அமெரிக்க மாப்பிள்ளை, டாக்டர் படிப்பு அவரை திருமண மோகத்தில் சிக்க வைத்தது. இந்த மோகத்தை தூண்டும் வகையில் அமெரிக்க நபர் அந்த இளம்பெண்ணிடம் பேசி விலை உயர்ந்த பொருட்களை காதல் பரிசாக கூரியர் பார்சலில் அனுப்பி வைத்திருப்பதாக கூறினார். அந்த பரிசு பொருட்களின் படங்களையும் அந்த இளம்பெண்ணுக்கு அனுப்பினார். இதில் சொக்கிப்போன அயனாவரம் இளம்பெண் அமெரிக்க டாக்டரை திருமணம் செய்ய உறுதி பூண்டார்.
ரூ.10 லட்சம் பறிபோனது
இந்த நிலையில் 'கூரியர்' நிறுவனத்தில் இருந்து பேசி, 'உங்கள் பெயரில் 'பார்சல்' ஒன்று வந்துள்ளது என்றும், மும்பையில் இருக்கும் அந்த பார்சலை உங்களுக்கு அனுப்பி வைக்க சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார்கள். அயனாவரம் பெண் அந்த தொகையை உடனே 'கூரியர்' நிறுவனம் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக ஒரு நபர் அயனாவரம் பெண்ணிடம் பேசினார். குறிப்பிட்ட தொகையை சொல்லி சுங்க கட்டணமாக அனுப்புங்கள் என்று தெரிவித்தார். அயனாவரம் பெண்ணின் மனதில் அமெரிக்க மாப்பிள்ளை தனது வருங்கால கணவராக பதிவாகிவிட்டார். இதனால் சுங்க கட்டணத்தையும் உடனே அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை பெயரிலும் அயனாவரம் பெண்ணுக்கு மிரட்டல்கள் வந்தன. ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி இதை நீங்கள் அனுப்பாவிட்டால், உங்களுடைய வருங்கால கணவர் சிறைக்கு செல்வார் என்று சொன்னார்கள். இதனால் மிரண்டு போன அயனாவரம் பெண் அந்த தொகையையும் அனுப்பி வைத்தார். இவ்வாறாக அவர், அமெரிக்க மாப்பிள்ளை மோகத்தில் மொத்தம் ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறிகொடுத்தார். ஆனால் விலை உயர்ந்த பரிசு பொருள் எதுவும் வீடு தேடி வரவில்லை.
போலீசில் புகார்
அடுத்து அமெரிக்க மாப்பிள்ளையின் குரலும் செல்போனில் ஒலிக்கவில்லை. அவருடைய செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' ஆகிவிட்டது. அப்போதுதான் அயனாவரம் பெண்ணுக்கு தான் மோசம் போனது தெரியவந்தது. உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 'சைபர் கிரைம்' துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் கிருத்திகா ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் அயனாவரம் பெண்ணிடம் செல்போனில் இனிக்க, இனிக்க பேசி மயக்கிய அமெரிக்க டாக்டர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் நொய்டாவுக்கு விரைந்தனர்.
நைஜீரிய ஆசாமி சிக்கினார்
அயனாவரம் பெண்ணிடம் அமெரிக்க டாக்டர் போல் பேசிய நபர் கைது செய்யப்பட்டார். அவர் நைஜீரியன் ஆவார். அவரது பெயர் சுக்வுமேகா இகெடினோபி (வயது 33) என்பது தெரியவந்தது. அவர் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வரப்பட்டார். தீவிர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோல் முகம் காட்டாமல், முகவரி கொடுக்காமல் செல்போனில் பேசுவதை மட்டும் நம்பி யாரும் குறிப்பாக இளம்பெண்கள் மோசம் போகக்கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.