'இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளிநாட்டில் விவாகரத்து கோர முடியாது' சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவு
இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளிநாட்டில் விவாகரத்து கோர முடியாது என கூறி ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும், கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் ஆஸ்திரேலியாவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது பழக்கம் ஏற்பட்டு 2006-ம் ஆண்டு சென்னையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கர்நாடகத்தைச் சேர்ந்த நபர், ஆஸ்திரேலிய கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, விவாகரத்து வழங்கி 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு ரத்து
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கோர்ட்டு வழங்கிய விவாகரத்து செல்லாது என உத்தரவிடக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த பெண் சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், 'திருமணம் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய கோர்ட்டு விவாகரத்து வழங்க முடியாது. எனவே ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல கோர்ட்டு, 'இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளிநாட்டில் விவாகரத்து கோர முடியாது. இந்தியாவில் உள்ள கோர்ட்டில்தான் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். ஆஸ்திரேலிய கோர்ட்டு மனுதாரருக்கு எந்த சம்மனும் அனுப்பாமல் முடிவெடுத்துள்ளது. எனவே, ஆஸ்திரேலிய கோர்ட்டு வழங்கிய விவாகரத்து ரத்து செய்யப்படுகிறது. அந்த உத்தரவு செல்லாது' என தீர்ப்பு கூறியது.