சென்னை: 17 வயது வடமாநில சிறுமிக்கு குழந்தை பிறந்தது- மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2024-04-01 05:56 GMT

கோயம்பேடு,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் அதிகாரி உமா மகேஸ்வரி, மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது பெற்ற தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்றதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான சிறுமியின் 40 வயதான தந்தை, நெற்குன்றத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். கோயம்பேடு பகுதியில் இவர்களது குடும்பம் வசித்து வருகிறது. தந்தைக்கு உதவியாக துணி கடைக்கு சென்ற சிறுமியிடம், அவரது தந்தையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி தாய் மற்றும் அண்ணனிடம் கூறினால் அவர்களை கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். பயந்துபோன சிறுமி, இதுபற்றி வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய தந்தை, ஒருகட்டத்தில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் கர்ப்பமான சிறுமி, இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில், திடீரென வயிற்று வலியால் துடித்த சிறுமியை அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போதுதான் சிறுமி திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகி, குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்