சீர்திருத்தப்பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

சீர்திருத்தப்பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.

Update: 2023-02-12 09:31 GMT

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்் தேதி அடித்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவனின் தாயார் பிரியா, தாம்பரம் கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2½ லட்சம், சமூக பாதுகாப்பு துறை இழப்பீடு நிலையில் இருந்து ரூ.7½ லட்சம் ஆக மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் சிறுவனின் தாயார் குடியிருக்க வீடு வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சிறுவனின் தாயார் பிரியாவிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு வீடு ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை வழங்கினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, தாம்பரம் கோட்டாட்சியர் செல்வக்குமார், தாசில்தார் கவிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட சிறுவனின் தாயார் பிரியா," நிவாரண உதவி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். தன் மகன் இறப்பில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்