பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்புஏமாற்றும் 'ஏ.டி.எம்.'எந்திரங்கள்பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து

‘ஏ.டி.எம்.'எந்திரங்களில் பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறாா்கள். இதுகுறித்து பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

Update: 2023-01-24 18:45 GMT


ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேரோதான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப் போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும்.

'அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு.

சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.

காலம் மாறியது

இப்போது காலம் மாறிவிட்டது. கடன், சேமிப்பு, அரசு உதவித்தொகை, ஓய்வு ஊதியம் என்று பெரும்பாலான பணிகளுக்கு மக்கள் வங்கிகளின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டார்கள். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக வங்கிச் சேவை கிடைக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளரிடம் காட்டுகின்ற கனிவு, வேலையில் துரிதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைப்பது இல்லை. உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அதை எடுக்க வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும்.

'ஏ.டி.எம்.' என்கிற தானியங்கி எந்திரம் அறிமுகமான பிறகு அந்த நிலை மாறி வந்தது. இருந்தாலும் அதன் சேவைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் வங்கிகளின் சேவைகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வங்கி பொறுப்பு ஏற்பதில்லை

விழுப்புரத்தை சேர்ந்த உமாபதி:-

ஏ.டி.எம். கார்டு பெறும் அதே வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மட்டுமே மிகக்குறைந்த எண்ணிக்கையில் இலவச பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. இதற்கு வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு மேல் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்தினால் அதற்கு தனி கட்டணம், மாற்று வங்கிகளின் ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தினால் அதற்கு தனி கட்டணம். இவ்வாறாக பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களை ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டின் மூலமாக வங்கி நிர்வாகங்கள் சுரண்டி வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் நம்முடைய அவசர தேவைக்கு எடுக்க செல்லும்போது பணம் இருப்பதில்லை. அதுபோக பல வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படுகிற கொடூரம், பணம் எடுத்துவிட்டதாக குறுஞ்செய்தி வரும், வங்கி கணக்கிலும் பணம் குறைந்துவிடும், ஆனால் எந்திரத்தில் பணம் வராது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி மனு எழுதிக்கொடுத்தால் அவருடைய கணக்கில் பணம் திரும்ப வரவு வைக்க 48 மணி நேரம் ஆகிறது. இந்த நெருக்கடி காலக்கட்டத்தில் ஒரு சாமானியன், மருத்துவ செலவிற்கோ, அத்தியாவசிய அவசிய தேவைக்கோ பணம் எடுக்க செல்லும்போது இதுபோன்று நடந்தால் அதற்கு வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்பதில்லை, வருத்தப்படுவதும் இல்லை.

வங்கியால் ஏற்பட்ட இழப்பிற்கு, நெருக்கடிக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு அடிக்கடி நடைபெறுவதால் ஏதோ உள்நோக்கம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தனியார் பண பரிவர்த்தனை செய்ய மறைமுகமாக வங்கிகள் ஊக்குவிக்கின்றனவோ என்றும் தோன்றுகிறது. ஏனெனில் தனியார் செயலிகள், வங்கிகளைத்தாண்டி மறைமுகமாக மக்களின் பணத்தை சுரண்டுவது எல்லோரும் அறிந்ததே. எல்லா வங்கிகளும் தங்களுடைய சொந்த செயலியை வைத்திருக்கிறது. சாமானியர்கள் பயன்படுத்தும் விதமாக எளிமையாக இல்லாததால் எல்லோரும் தனியார் செயலிகளான கூகுள்பே, போன்பே போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பணம் எடுப்பது குறைந்துவிட்டது

திண்டிவனம் முஸ்தபா:-

கூகுள்பே, பே.டி.எம் போன்றவை வந்த பிறகு பொதுமக்கள், ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுப்பது பெருமளவில் குறைந்துவிட்டது. வியாபாரிகளுக்கு செல்போன் மூலமாக பணம் செலுத்தவும், வாங்கவும் சுலபமான வழியாக பே.டி.எம்., கூகுள்பே போன்றவை அமைந்துவிட்டதால் ஏ.டி.எம். மையத்திற்கு முக்கியத்துவம் தற்போது இல்லை.

ஏ.டி.எம். மையத்துக்கு சென்றால் சர்வர் பிரச்சினையால் பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது. இருந்தபோதிலும் வங்கிகள், ஏ.டி.எம். மையத்துக்கு உண்டான தொகையை எடுத்து விடுகிறார்கள். தற்போது ஏ.டி.எம். அட்டையை நான் பயன்படுத்தி 6 மாத காலம் ஆகிறது. வெளியூர்களுக்கு செல்லும்போது பணத்தேவை ஏற்பட்டால் மட்டுமே ஏ.டி.எம். அட்டையை உபயோகித்து வருகிறேன்.

மேல்மலையனூர் அருகே கொடுக்கன்குப்பத்தை சேர்ந்த பத்மாவதி கிருஷ்ணமூர்த்தி:-

தற்போது செல்போன் மூலமாகவே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் இதை ஊக்குவிக்க ஏ.டி.எம். சேவைகளில் குறைபாடுகள் ஏற்படுகிறதோ என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்கள் எவ்வித குறைபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு எளிமையாக இருக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சிறந்த சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம் இருப்பதில்லை

செஞ்சி அருகே மகாதேவிமங்கலத்தை சேர்ந்த கோபி:-

ஏ.டி.எம். மையம் என்பது முன்பு அவசர காலத்துக்கு பணம் எடுப்பதற்கு உதவியாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, பல இடங்களில் சேவை குறைபாடு இருக்கிறது. நாம் வெளியூர்களுக்கு செல்லும்போது அவசர தேவைக்கு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச்சென்றால் அதில் பணம் இருப்பதில்லை. இல்லையெனில் முறையாக இயங்குவதில்லை. இதனால் அவசர காலத்துக்கு ஏ.டி.எம். அட்டை உபயோகமில்லை என்று கூறலாம். இந்த ஏ.டி.எம். அட்டையானது, கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும், ஓட்டல் போன்ற இடங்களில் உபயோகிப்பதற்கும் மிக எளிதாக உதவுகிறது.

ஆனால் ஏ.டி.எம். மையங்களில் சென்று பணம் எடுப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. அனைத்து பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களை புதுப்பிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரங்களையும் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே அவசர காலத்துக்கு ஏ.டி.எம். மையங்களுக்குச்சென்று பணம் எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

முழுமையான சேவை

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

வாடிக்கையாளர்கள் சேவையை அதிகரிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கி வேலை நேரமான காலை 10 முதல் பகல் 4 மணிக்கு பிறகும் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்க இது ஒரு நல்ல வழியாக இருந்தது. ஆனால், வங்கி கிளைகளில் ஊழியர்களை நியமித்து சம்பளம் தருவதை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களை நாடிச் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஆனால் பல ஏ.டி.எம்.களில் மோசடி, திருட்டு போன்றவை நடந்ததால் மாலை 6 மணிக்கு மேல் அதனையும் மூடத் தொடங்கி உள்ளனர். அனைத்து வங்கிகளிலும் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற திட்டம் வந்ததால், இத்தனை ஏ.டி.எம்.கள் எதற்கு? தேவையில்லாதவற்றை மூடவும் வங்கிகள் முடிவு செய்து செயல்படுத்தின. இதற்கு டிஜிட்டல் வங்கி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்கள் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்வதை காரணமாக கூறப்பட்டது. தொழில்நுட்ப அறிவு காரணமாக படித்தவர்கள் அதிகம் பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். படிக்காத பாமர மக்களிடம் இருந்து எந்த புகாரும் வருவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு முறையாக சேவை அளிப்பதற்காக வங்கி நிர்வாகங்கள் வங்கி கிளைகளில் ஊழியர்களை போதுமான அளவு நியமித்து மீண்டும் பழைய முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இல்லை என்றால் கூடுதலாக ஏ.டி.எம். எந்திரங்களை உரிய பாதுகாப்புடன் அமைத்து முழுமையான சேவை அளிக்க வேண்டும். இதுதொடர்பான அரசின் கொள்கையையும், ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் தொழிற்சங்கங்கள் வாடிக்கையாளர்கள் நலன் கருதி எதிர்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளே நிரப்பவேண்டும்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ கூறியதாவது:-

ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியில் வங்கி ஊழியர்கள்தான் முதலில் ஈடுபட்டனர். அப்போது எந்தப்பிரச்சினையும் ஏற்படவில்லை. காலப்போக்கில் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணி முழுவதும் தனியார் வசம் சென்றுவிட்டது. இதனால்தான் தற்போது பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை. நம் நாட்டில் பல வகையான ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் வைக்கும் முறையில் அளவு மாறுபடும். பொதுவாக சில ஏ.டி.எம்.களில் ரூ.40 லட்சம் வரை வைக்க முடியும். ஆனால் ரிசர்வ் வங்கி கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டு வெறும் 1.65 சதவீதம் மட்டுமே புழக்கதில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால் வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு இல்லாததால் ரூ.40 லட்சம் கொள்ளளவு கொண்ட ஏ.டி.எம்.களில் வெறும் ரூ.20 லட்சம்தான் வைக்க முடிகிறது. அதேபோல் ரிசர்வ் வங்கியும், வங்கிகளுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்றால்தான் ரிசர்வ் வங்கிக்கு புகார் ஆகும். ஆனால் தொழில்நுட்ப கோளாறு என்று எ.டி.எம். எந்திரங்களில் குறுஞ்செய்தி வரும் வகையில் மாற்றி வைத்து கொள்கின்றனர். பொதுமக்களுக்கு ஏ.டி.எம்.கள் மூலம் முழுமையான சேவை அளிக்க வங்கி நிர்வாகங்கள் விரும்பினால், மீண்டும் ஏ.டி.எம்.களில் வங்கி ஊழியர்களை பணம் நிரப்பும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு அபராதம்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் உள்ளதா? என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாதபோது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன? என்பது பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஒரு சில வங்கிகளில் மட்டுமே ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமல் ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்போது உள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எனவே அனைத்து வங்கிகளுக்கும் இதனை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பணம் நிரப்ப வேண்டும்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த இன்னா் வீல் சங்க முன்னாள் தலைவி ஜோதிமணி:- பண்டிகை காலங்கள் மற்றும் 2 அல்லது அதற்கு மேல் உள்ள விடுமுறை நாட்களில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டுள்ளது. ஒரு சில ஏ.டி.எம். மையம் திறந்து இருந்தாலும் அதில் பணம் இருப்பதில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் அல்லல் பட வேண்டிய நிலை உள்ளது. எனவே பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அனைத்து வங்கி ஏ.டி.எம். மையங்களும் செயல்பட வேண்டும். திறந்து இருந்தால் மட்டும்போதாது எந்திரத்தில் பணம் தீர்ந்து போனால் அதை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஏ.டி.எம். மையங்கள் வைத்துள்ளதற்கான உண்மையான பலன்களை மக்கள் பெற முடியும் என்றார்.

பாதுகாவலரை நியமிக்க வேண்டும்

தியாகதுருகத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சிவனடிமை ஜெய்சங்கர்:-

ஆன்லைன் பண பரிவர்த்தனை வந்தபிறகு ஏ.டி.எம். மையங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பணம் எடுப்பதற்கு முன்பு வங்கியில் நீண்ட வரிசையில் நிற்பது போல் ஏ.டி.எம். மையங்களிலும் நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. பல ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என போர்டுகளும் வைக்கப்படுகிறது. இது ஏதோ காட்சி பொருளுக்காக வைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே வங்கியாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களை முறையாக பராமரித்து, பணம் காலியானதும் உடனடியாக நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து பின் நம்பரை நோட்டமிட்டு வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நிலையும் உள்ளது. இதை தடுக்க அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதோடு பாதுகாவலர்களையும் நியமிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்