கும்பகோணத்தில் விலை குறைந்த தக்காளி

Update: 2023-09-07 20:20 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் வரத்து அதிகரித்தால் தக்காளி விலை குறைய தொடங்கி விட்டது. 2 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது.

அழகு சாதன பொருட்கள்

தக்காளி இல்லாத உணவு பொருட்களே தயாரிக்க முடியாது. ரசம் முதல் பிரியாணி, சட்னி வரை அனைத்து சைவம் மற்றும் அசைவ உணவுகளிலும் தக்காளி இடம் பெரும். உணவுகளின் சுவை அதிகரிப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல் தக்காளி சார்ந்த அழகு சாதன பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் உணவுகளில் தக்காளியை சேர்க்க வேண்டுமா? என்ற எண்ணத்தில் இல்லத்தரசிகள் இருந்தனர். கும்பகோணத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றது. கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் அதிகபட்சமாக 1 கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. சில்லறை கடைகளில் மொத்த விற்பனை கடையை காட்டிலும் சற்று கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சமையலுக்கு முக்கியமான காய்கறி என்பதால் மக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்றனர்.

வரத்து அதிகரிப்பு

விலை உயர்ந்த காரணத்தால், கிலோ கணக்கில் வாங்கியவர்கள் ½ கிலோ, ¼ கிலோ அளவுக்கு வாங்கி சென்றனர். இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தற்போது வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை படிபடியாக குறைந்து வருகிறது. கும்பகோணத்தில் கடந்த வாரம் வரை கிலோ ரூ.50-க்கு விற்பனையான தக்காளி நேற்று 1 கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. நீண்ட நாட்களாக விலை அதிகரித்து வந்த தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

காய்கறிகள் விலை குறைவு

தக்காளி விலை குறைவை தொடர்ந்து வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வேன், லோடு ஆட்டோக்களில் மொத்தமாக வாங்கி வந்து வீதி வீதியாகவும், கிராமங்கள் தோறும் விற்பனை செய்து வருகின்றனர்சில சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்றவாறு 2 கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனையாகிறது.

இதே போல் கத்தரிக்காய் விலையும் குறைந்துள்ளது. ரூ.40-க்கு விற்ற கத்தரிக்காய் நேற்று ரூ.15-க்கு விற்பனையானது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்திற்கு தினமும் டன்கணக்கில் காய்கறிகள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை மற்றும் வெயிலால் காய்கறிகள் விளைச்சல் பாதித்தது. அவற்றின் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. தற்போது வரத்து அதிகரிக்க தொடங்கியதால் படி, படியாக காய்கறிகள் விலை குறைய தொடங்கிவிட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்