வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் பலி அதிகரிப்பு
வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் பலி அதிகரிப்பு
திருப்பூர்
ஊத்துக்குளி பகுதியில் வெறிநாய் கடிப்பதால் ஆடுகள், கன்றுகள் பலியாவது அதிகரித்து வருகின்றன. கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
வெறிநாய் கடியால் ஆடு, கன்றுகள் பலி
திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு தாசில்தார்கள், வருவாய்த்துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊத்துக்குளி தாலுகா புஞ்சை தளவாய்பாளையம், வடுகபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் ஏராளமானவை பலியாகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மான்களால் விவசாய பயிர்கள் நாசம்
ஊத்துக்குளி, அவினாசி, பொங்கலூர் ஒன்றியங்களில் மான்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதை ஈடுகட்ட வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் மான்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடவும், வனத்தில் இருந்து மான்கள் வெளியேறாத வகையிலும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்துவர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
அரசூர்-ஈங்கூர் உயர்மின் கோபுர திட்டத்தால் அவினாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகளை தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்துக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பொதுவாக பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள். இழப்பீடு குறித்து தனித்தனி பட்டியல் வழங்கவும், வெளிப்படைத்தன்மை இருக்கவும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகை அந்த கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் ரேஷன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டையை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
ஆண்டிப்பாளையம் குளத்தில் கழிவுநீர்
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், 'ஆண்டிப்பாளையம் குளம் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த குளம் தண்ணீரால் நிறைந்து காணப்படுகிறது. குளத்துக்கு அருகில் சிறுவர் பூங்கா பழுதடைந்துள்ளது. இதை புதுப்பிக்க வேண்டும். குளத்தில் படகு சவாரி, சிறுவர்களுக்கு நீர் விளையாட்டு, பார்வையாளர்கள் மாடம் போன்றவை சுற்றுலாத்துறை மூலமாக உருவாக்க தமிழக அரசு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்தும், சுல்தான்பேட்டை வடக்கு பகுதிகளில் இருந்தும் வரும் கழிவுநீர் முழுவதும், குளத்துக்கு வரும் ராஜவாய்க்காலில் கலந்து குளத்துக்குள் வருகிறது. இதனால் குளத்து நீர் மாசடையும் நிலை உள்ளது. சுற்றுலாத்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள நிலையில், குளம் மாசுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
அரசு நிலம் விற்பனை
திருப்பூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மழைக்காலத்தில் நீர் கட்டிடத்துக்குள் கசிகிறது. புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை நிதியை அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். திருப்பூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் பதவி கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதை உடனடியாக நிரப்ப வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
அவினாசி அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், 'அவினாசி அய்யம்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மோசடியாக தனிப்பட்ட நபருக்கு பட்டா வழங்கி நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.