மானாமதுரை ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.

Update: 2023-05-02 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.

சித்திரை திருவிழா

மானாமதுரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படியில் எழுந்தருளினர். கோவில் சிவாச்சாரியார்கள் ராஜேஷ், குமார், அம்பி, பரத்வாஜ் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மாலைகளை மாற்றி, சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று தேரோட்டம்

அப்போது அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் அனைவரும் தங்களது திருமாங்கல்யத்தையும் மாற்றினர். இந்த திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கோவிலின் வெளிப்புறத்தில் அகன்ற திரை வைக்கப்பட்டு அதில் நேரடி காட்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும், 5-ந்தேதி காலை 7 மணி முதல் 7.25 மணிக்குள் வைகையாற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சியும், 6-ந்தேதி வைகைாற்றில் நிலாச்சோறு உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிதார்கள் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் மானாமதுரை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்