நிலவில் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றிய சந்திரயான் ரோவர் : இஸ்ரோ தகவல்

நிலவில் பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி ரோவர் பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Update: 2023-08-28 11:25 GMT

சென்னை,

உலகின் எந்த நாடுமே நுழைந்திடாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தடம் பதித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ந் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையங்கியது. அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் லேண்டரில் இருந்த 26 கிலோ பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்து. இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் இந்தியா சரித்திர சாதனை படைத்தது.

நிலவில் தரையிறங்கியதும், லேண்டரும், ரோவரும் தங்கள் பணிகளை திட்டமிட்டபடி தொடங்கி விட்டன. நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு விதமான ஆய்வுகளை இந்த கருவிகள் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் நிலவின் மேற்பகுதியில் இருந்து பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு தளத்துக்கு அனுப்பி வருகின்றன. அந்தவகையில் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது. லேண்டரில் உள்ள நவீன கேமரா மூலம் இது எடுக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை சந்திரயான் விண்கலத்தின் ரோவர் மேற்கொண்டு வருகிறது. வெப்பநிலை குறித்தும்  ஆய்வு மேற்கொண்டது. இதனிடையே,  சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் தனக்கு முன்னால் உள்ள பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியிருப்பதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து அனுப்பப்பட்ட கட்டளையை ஏற்று ரோவர் தனது பாதையை மாற்றியிருப்பதாகவும் தற்போது பாதுகாப்பாக பயணிப்பதாகவும் இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்