நிலவில் தென் பகுதியில் கால்பதித்த சந்திரயான்-3 விண்கலம்

நிலவில் தென் பகுதியில் கால்பதித்த சந்திரயான்-3 விண்கலத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-23 19:41 GMT

சந்திராயன்-3 விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் கருவி நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்த காட்சியை பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரலையாக டி.வி.யில் ஒளிப்பரப்பப்பட்டதை கண்டுகளித்தனர். சில தனியார், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இந்த நிகழ்வு நேரலையாக திரையிட்டு காட்டப்பட்டது. சந்திரயான் வெற்றி குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

இஸ்ரோ விஞ்ஞானி

பெரம்பலூர் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி காவ்யா:- ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்ட போது, அதன் லேண்டர் கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது. ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோர்வடையாமல் சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை கடந்த 14-ந்தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் அனுப்பினர். அந்த விண்கலத்தின் லேண்டர் கருவி எந்தவொரு பிரச்சினையின்றி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அந்த நிகழ்வு எங்கள் கல்லூரியில் நேரலையாக எங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அப்போது நாங்கள் ஆர்வத்துடன் பார்த்தோம். நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவி தொட்ட போது நாங்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தோம். சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானி குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த கட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்பவும், மேலும் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அந்த திட்டங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

புதிய வரலாறு

பெரம்பலூர் கல்லூரி மாணவி மன்ஹா:- சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவி நிலவின் தென் துருவத்தை தொட்ட வெற்றியை ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும். நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளோம். எங்கள் கல்லூரியில் இந்த நிகழ்வு நேரலையாக திரையிட்டு காட்டப்பட்டதை நாங்கள் ஆர்வத்துடன் பார்த்தோம். நிலவை லேண்டர் கருவி தொடுவதற்கு முன் நாங்கள் ஒரு வித பதட்டத்துடனே பார்த்தோம். இறைவனிடம் பிரார்த்தனை செய்தோம். நிலவை லேண்டர் கருவி தொட்ட போது நாங்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தோம். மேலும் செல்போன்களில் பிளாஸ் லைட் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

பெரம்பலூரை சேர்ந்த பாஸ்கர்:- சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை நேரலையில் செல்போன் மூலம் சக கல்லூரி நண்பர்களுடன் பார்த்தேன். இதற்காக பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானி குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சந்திரயான்-3 விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டதில் இருந்து பேசும் பொருளாக மாறியது. கிராம மக்களும் சந்திரயான்-3 விண்கலம் குறித்து பரவலாக பேசி வந்தனர். இந்தியாவின் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்த இந்தியாவை அனைத்து நாடுகளும் உற்று பார்க்கிறது.

ஆராய்ச்சி படிப்பு

பெரம்பலூர் தனியார் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் சிசில்:- எங்கள் கல்லூரியில் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தரையிறங்கிய காட்சி திரையிடப்பட்டு காட்டப்பட்டது மாணவ-மாணவிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது. இந்தியா இந்த சாதனை நிகழ்த்திய தருணம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் இந்த சாதனையால் இளைய தலைமுறையினர் ஆராய்ச்சி படிப்பு படிக்க முன்வருவார்கள். வரலாற்று சாதனை படைத்த இந்தியா மேன்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்