தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update:2023-05-02 05:11 IST

சென்னை,

தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மே 1-ந்தேதி (நேற்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையிலும் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது.

மிதமான மழை

இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4, 5-ந்தேதிகளில் தமிழகம்-புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்தில்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட், குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கிண்ணக்கொரையில் 6 செ.மீ. மழையும், குந்தா பாலம், கெத்தை, பர்லியார், கோத்தகிரியில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்