ரெயில்வே வாரியத்தின் தலைவர் சென்னை வருகை: பெரம்பூர் ஆஸ்பத்திரியில் ஆய்வு

சென்னைக்கு வந்த ரெயில்வே வாரியத்தின் தலைவர், ரெயில்பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார்.

Update: 2022-10-28 21:36 GMT

சென்னை,

ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினய் குமார் திரிபாதி, நேற்று சென்னை வந்தார். இவர் நேற்றைய நாளின் முதல் பாதியில் பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில்பெட்டி தொழிற்சாலைக்கு (ஐ.சி.எப்) நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பெரம்பூரில் உள்ள தெற்கு ரெயில்வேயின் தலைமை ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அங்கு டாக்டர்களுக்காக, வசதிகளுடன் கூடிய புதிய தங்கும் விடுதியை தலைமை செயல் அதிகாரி திறந்து வைத்தார்.

மேலும் ஆஸ்பத்திரியில், மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பினை (எச்.எம்.ஐ.எஸ்) அவர் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனை மேலாண்மை அமைப்பு ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்

இதனை தொடர்ந்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஆஸ்பத்திரி டாக்டர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பூரில் நடைபெற்றது. ஆஸ்பத்திரி ஆய்வுக்கு பிறகு, தலைமை செயல் அதிகாரி அத்திப்பட்டு நிலையத்துக்கு சென்று பல்வேறு ரெயில்வே பகுதிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளுடன், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுக அதிகாரிகளை சந்தித்து, ரெயில் மூலம் நிலக்கரி சரக்குகளை கொண்டு செல்வது குறித்த பல்வேறு அம்சங்களை பற்றி விவாதித்தார்.

இந்த ஆய்வின் போது தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் ரெயில்வே துறை முதன்மை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்