சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் போலீஸ் நிலையங்கள் மூலம், காணாமல் போன செல்போன்கள் குறித்து பெறப்பட்ட புகார்களை விசாரணை செய்து 150 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆன்லைன் வழியாக மோசடி கும்பலால் திருடப்பட்ட ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்து 160-ஐ கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்து சிறப்பாக பணி புரிந்ததற்காக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சத்யாநந்தன் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட 20½ கிலோ கஞ்சா, 1,030 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது. 12 லாட்டரி வழக்குகள் மற்றும் 10 வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக பணி புரிந்ததற்காக தனிப்படை போலீஸ் குழுவினருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் 3 சிறார்களை கைது செய்ததற்காக இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சித்ரா பவுர்ணமி
திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய கிரண்ஸ்ருதி, திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை (கிராமியம்), குணசேகரன் (டவுன்), வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் பாதுகாப்பு பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்து பணி புரிந்தமைக்காக அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்யாறு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 23 இருசக்கர வாகனங்களை மீட்டு சிறப்பாக பணி புரிந்தமைக்காக இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.