அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

Update: 2023-06-27 18:53 GMT

காரைக்குடி, 

அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பழனியப்பா கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், சாதனை மாணவர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆசிரியர்களுக்கும் சாதனை மாணவர்களுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையற்றினார்.

மாணவிக்கு நிதி

விழாவில் மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 31 மாணவர்கள் 13 வகையான போட்டிகளிலும் 3 குழு போட்டிகளில் பங்கு பெற்று தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்தமைக்காக ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த அன்னபூரணி என்ற மாணவி நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை பரிசாக வழங்கினார்.

நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 146 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும், அதே போன்று 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 26 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்