ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் மூலவர் சன்னதிகளுக்கு வெள்ளி கதவுகள் பொருத்தும் விழா

ஆறாவதுபடை வீடு சோலைமலை முருகன் கோவிலில் மூலவர் சன்னதிகளுக்கு வெள்ளி கதவுகள் பொருத்தும் விழா நடந்தது.

Update: 2022-12-22 20:57 GMT

அழகர்கோவில்

ஆறாவதுபடை வீடு சோலைமலை முருகன் கோவிலில் மூலவர் சன்னதிகளுக்கு வெள்ளி கதவுகள் பொருத்தும் விழா நடந்தது.

வெள்ளி கதவுகள்

முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் அழகர் மலையில் இயற்கை எழிலுடன் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலில் கடந்த 11-ந் தேதி மூலவர் சன்னதிகளுக்கு வெள்ளி கதவுகள் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து முடிந்தது. மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், சன்னதிகளில் கதவுகளுக்கு வெள்ளி தகடுகள், ஆகமப்படி வரிசையாக பதிக்கப்பட்டது.

இதில் 3 அடி அகலத்தில் 6¼ அடி உயரத்தில் இரு பக்க புதிய வெள்ளி கதவுகள் அமைக்கப்பட்டது. மேலும் ஆறு படைவீடுகளில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய திருக்கோலம் காரைக்குடி சிற்பிகளால் நுணுக்கமாக 250 கிலோ வெள்ளியால் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது. வித்தக விநாயகர் சன்னதிகள் கதவுகளும் அதே மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.

சிறப்பு பூஜை

இதற்கான வெள்ளி கதவுகள் அணிவிக்கும் விழா நேற்று காலையில் மூலவர் சன்னதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்திற்கு அருகில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோ, கஜ, அஸ்வா பூஜைகள் நடந்தது. பின்னர் பரிபூர்ண கும்பங்களை சிவாச்சாரியார்கள், கல்யாணசுந்தரவல்லி யானை முன்செல்ல, மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் பிரகாரம் சுற்றி வந்து மூலவர் சன்னதிக்கு வந்்தனர். அங்கு புதிய வெள்ளி கதவுகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிறகு புதிய வெள்ளி கதவுகள் திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

அப்போது பக்தர்கள், மற்றும் காரைக்குடி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த திருமுருகன் திருப்புகழ் பாராயண குழுவினர்கள், மகளிர் குழுவினர் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக வெள்ளி கதவுகள் இணைக்கும் விழாவில், ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம், அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் ராமசாமி, நகைசரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, முருக பக்த சபை குழு தலைவர் சுப்பையா செட்டியார், கண்காணிப்பாளர் பிரதீபா, உள்துறை அலுவலர்கள், தேவராஜ், பாண்டியன், ராஜா, மற்றும் உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்