சமயபுரம் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை; அதிகாரி தகவல்
சமயபுரம் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பலர் செல்போனில் படம் எடுப்பதாகவும், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டு வருவதாகவும் கோவில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தலின்படி கோவில் பணியாளர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சில பக்தர்கள் செல்போனில் படம் பிடிப்பதும், செல்போனில் பேசியபடி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து செல்போனை பறித்து, அதில் உள்ள பதிவுகளை நீக்கிய அதிகாரிகள், இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கல்யாணி கூறுகையில், கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை ராஜகோபுரம், மூலஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் கோவிலுக்குள் செல்போனில் படம் பிடிக்கும் செயல்களிலும், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈடுபடுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போனை உள்ளே கொண்டு செல்லாத வகையில், அவற்றை பாதுகாக்க ஸ்டாண்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும், என்றார்.