குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என்று குடியாத்தம் வேதாந்தம் நகரை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-04-03 18:24 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 370 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

பொய்யான புகார் மனு

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குடியாத்தம் தாலுகா சார்பில் மாவட்ட தலைவர் ரா.ப.ஞானவேலு தலைமையில் செயலாளர் ஏ.வி.எம்.குமார் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையை கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஒரு தரப்பினர் பொய்யான புகார் மனு குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அளித்தார். அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் வந்து வணிகர்களுக்கு தொல்லை தருகிறார்கள். அரசு மருத்துவமனை தெருவில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வணிகம் செய்து வருகிறோம். வணிகர்கள் குறித்து பொய் புகார் அளிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு வேலூர் ஜவுளி, ரெடிமேடு வணிகர் சங்கம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.2 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

செல்போன் கோபுரம்

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை வேதாந்தம்நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், வேதாந்தம் நகரில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று போராட்டங்கள் செய்தோம். அதன்பேரில் கோபுரம் அமைக்க மாட்டோம் என்று செல்போன் நிறுவனத்தினர் கூறினர். ஆனால் இரவு வேளையில் பணிகள் நடந்து வருகிறது. எனவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

குடியாத்தம் பா.ம.க. சார்பில் அளித்த மனுவில், குடியாத்தம் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் நெசவுக்கு தரமான நூல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெசவுக்கு தரமான நூல்களை வழங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 12-ந் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறியிருந்தனர். விரிஞ்சிபுரம் ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் அளித்த மனுவில், ஊராட்சியில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கலெக்டரிடம் வாழ்த்து

ஒடுகத்தூரை சேர்ந்த மூதாட்டி பவுனம்மாள் ஆதரவு இல்லாமல் தவிக்கும் தனக்கு வழங்கப்பட்ட முதியோர் தொகை தற்போது வரவில்லை. எனவே நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனு அளித்துவிட்டு வெளியே வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு பெண் போலீசார் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

கூட்டத்தில் கர்நாடகாவில் நடந்த முதியோருக்கான தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற கே.வி.குப்பம் காளாம்பட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ்பாபு, மராட்டிய மாநிலத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வேலூர் தொரப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரகாஷ் ஆகியோர் பதக்கங்கள், சான்றிதழ்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கலெக்டர் விருப்ப உரிமை நிதியில் இருந்து தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்