காவிரி பிரச்சினை: அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசை பா.ஜ.க. தூண்டி விடுகிறது -மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

காவிரி பிரச்சினையில் அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசை பா.ஜ.க. தூண்டி விடுகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

Update: 2023-10-02 22:17 GMT

திருமங்கலம்

காந்தி சிலைக்கு மரியாதை

திருமங்கலத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். விழாவில் உலகத்தினுடைய அமைதியின் அடையாளமாக உள்ள அவரை நினைவுப்படுத்துவதிலும் பெருமை அடைகிறோம்.

ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க.காரராகவே மாறிவிட்டார். அவருடைய மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களை விட அதிகமாக மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். அவருடைய ஆசை தொடர்ந்து மோடி அரசு தொடர வேண்டும். தமிழக மக்களை பொருத்தவரை 2019-ல் மோடி அரசை நிராகரித்தார்கள். இந்த முறையும் நிராகரிப்பார்கள்.

அரசியல் நோக்கத்திற்காக

காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ தமிழ்நாடு காங்கிரஸ் அதற்கு ஆதரவு தரும். அனைத்து கட்சி கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, காவிரி பிரச்சினைக்காக போராடி வருகிறோம். பா.ஜ.க. குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறது. டி.கே.சிவகுமார் முதல் 15 நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் பா.ஜ.க. அரசியல் நோக்கத்திற்காக கர்நாடக அரசை தூண்டிவிட்டு போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடக அரசு மக்களுக்கு 2000 ரூபாய் கொடுத்ததில் இருந்து பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. தங்களுடைய அரசியலுக்காக கர்நாடக அரசை திசை திருப்ப வேண்டும் என பா.ஜ.க. கர்நாடகாவில் கலவரத்தை தூண்டி விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், நகரத் தலைவர் சௌந்தரபாண்டி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தேசிங். கவுன்சிலர் அமுதா சரவணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்