கள்ளக்குறிச்சி கலவர சம்பவம் எதிரொலி: சாதிய அமைப்புகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் கடலூரில் செ.கு. தமிழரசன் பேட்டி

சாதிய அமைப்புகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று கடலூரில் செ.கு. தமிழரசன் தொிவித்தாா்.

Update: 2022-07-23 17:25 GMT


இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செ.கு. தமிழரசன் தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் பிரபு, இணை பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, மாநில பொதுச்செயலாளர் கவுரிசங்கர், மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயமணி, ரத்தினவேல், சிவகுரு, வேலாயுதம் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில துணை தலைவராக சென்னையை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாநில தலைவர் செ.கு. தமிழரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சமீப காலமாக தமிழகத்தில் சாதிய அமைப்புகள் வலுப்பெற்று வருகிறது. இதன் வெளிபாடே கள்ளக்குறிச்சி கலவர சம்பவம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம். இதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகி விட்டது. அடித்தட்டு மக்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

1400 ஆதிதிராவிட பள்ளிகளில், 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உள்ளது. ஆனால் இதில் படித்த ஒரு மாணவர் கூட மருத்துவம் படிக்க முடியவில்லை. ஆனால் ஆந்திராவில் 70 பேருக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். அக்னி பாத் திட்டம் ராணுவத்தை தனியார் மயமாக்கும் செயலாக உள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதியிலேயே புதிய பஸ் நிலையம் அமைய வேண்டும். இவ்வாறு செ.கு. தமிழரசன் கூறினார்.

தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்து கேட்ட போது, மின்வாரியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர வழித்தடத்திற்காக செலவு அதிகம் ஆகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்