லிப்ட் கேட்பதுபோல் நடித்து ஐ.டி.நிறுவன ஊழியரிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது

லிப்ட் கேட்பதுபோல் நடித்து ஐ.டி.நிறுவன ஊழியரிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது

Update: 2022-11-03 16:53 GMT

அனுப்பர்பாளையம்

லிப்ட் கேட்பதுபோல் நடித்து ஐ.டி.நிறுவன ஊழியரிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ஐ.டி.நிறுவன ஊழியர்

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 30-ந்தேதி மதியம் கார்த்திக் வீட்டில் இருந்து கோவைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் வஞ்சிபாளையத்தை தாண்டி சென்றபோது வாலிபர் ஒருவர், கைவிரலை நீட்டி கார்த்திக்கிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதை பார்த்த கார்த்திக் மோட்டார்சைக்கிளை நிறுத்தி உள்ளார். அவரிடம் அந்த வாலிபர் தன்னுடைய மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகி நிற்பதாகவும், சிறிது தூரத்தில் நண்பர்கள் நிற்பதால் அங்கு இறக்கி விடுமாறும் கூறி உள்ளார்.

இதை நம்பிய கார்த்திக், அந்த வாலிபரை மோட்டார்சைக்கிளில் ஏற்றி சென்றார். சிறிது தூரம் சென்ற உடன் ஒரு காட்டுப்பகுதி வந்ததும் அங்கு தன்னை இறக்கி விடுமாறு அந்த வாலிபர் கூறியதால், மோட்டார்சைக்கிளை கார்த்திக் நிறுத்தினார். அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் லிப்ட் கேட்டு வந்த வாலிபருடன் சேர்ந்து, திடீரென கார்த்திக்கை மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை செல்போன் மூலமாக அனுப்புமாறும், இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

3 பேர் கைது

இதனால் பயந்து போன கார்த்திக் அவருடைய செல்போனில் இருந்து ரூ.90 ஆயிரம் பணத்தை 2 பேரின் வங்கிக் கணக்கிற்கு பிரித்து அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். . பின்னர் 3 நாட்கள் கழித்து கார்த்திக் இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கார்த்திக் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு எண் மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதில் கார்த்திக்கிடம் வழிப்பறியில் ஈடுபட்டது திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (26), தனபாலன் (26), சுபாஷ் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிரடியாக அந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கார்த்திக்கிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கிஷோர்குமார், தனபாலன், சுபாஷ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்