பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது.
சென்னை,
பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பில் கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளதாகவும், அதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பர் 24ம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.