முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை முறையாக பின்பற்றாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

Update: 2023-08-03 12:36 GMT

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை மீது தேசிய கொடியைப் போர்த்தி மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தேசிய சின்னங்கள் அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மூன்று பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகவில்லை என வாதிடப்பட்டது. மேலும் சட்ட விதிகளை பின்பற்றி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் நோக்கில் ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது என்று தெரிவித்தார். மேலும் விதிகளை முறையாக பின்பற்றாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மூவர் மீதான வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்