பெண்ணின் வீட்டை சூறையாடிய 3 பேர் மீது வழக்கு
பெண்ணின் வீட்டை சூறையாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி நதியா (வயது 35) மற்றும் பெண் உறவினர் ஒருவர். இவர்கள் 3 பேரும் வீட்டின் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து உள்ளார்கள். அப்போது அங்கு வந்த அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் விக்னேஷ், பாத்தம்பட்டி குமார் மகன் அப்பு என்கிற மோகன்ராஜ், ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக குடிநீர் பிடித்த இடத்தில் சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பின்னர் விக்னேஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து நதியா வீட்டில் பாட்டில்களை வீசியும், வீட்டிற்கு உள்ளே நுழைந்து பாட்டில்களை உடைத்துள்ளனர். மேலும் ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளையும் உடைத்து வீட்டை சூறையாடி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நதியா ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.