விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் - 2 பேர் காயம்...!
கோவை அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 37). இவர் இன்று மதியம் மேட்டுப்பாளையத்திற்கு தனது காரில் குடும்பத்துடன் சென்று கொண்டு இருந்தார்.
காரில் ராஜேஷ்சின் தந்தை, மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தனர். காரை ராஜேஷ் ஓட்டி வந்தார். அவர் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கேஸ் கம்பெனி அருகே வரும்போது எதிரே வந்த மற்றொரு கார் மோதியது.
இந்த விபத்தில் ராஜேஷ் குடும்பத்தினர் வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அவரது மனைவி மற்றும் தந்தைக்கு காயம் அடைந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.