டயர் வெடித்ததால் தலைகீழாக கவிழ்ந்த கார்- 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது.

Update: 2024-05-12 01:17 GMT

கடலூர்,

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகா ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 40). இவர், அதே ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரேகா(36). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு நந்தனா(13), மிருதுளா(8) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இதில் நந்தனா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பும், மிருதுளா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். ரேகா பணிபுரியும் நிறுவனத்தில், தஞ்சை இ.பி. காலனியை சேர்ந்த லூமன் சங்கித் மனைவி தெரசா டெல்பின்(28) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜெயிலி கிளாடியா(2½) என்ற குழந்தை உள்ளது. தெரசா டெல்பினின் தோழியான ஷாலினி, புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் சுப்பிரமணிய சிவா நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷாலினி, புதுச்சேரிக்கு சுற்றுலா வருமாறு தெரசா டெல்பினை அழைத்தார். அதன்படி அவரும், தன்னுடன் வேலைபார்க்கும் ரேகாவின் குடும்பத்துடன் வருவதாக கூறினார். இதையடுத்து அவர்களை அழைத்து வருவதற்காக ஷாலினியின் கணவர் பிரவின்குமார்(40), நேற்று முன்தினம் மாலை தனது காரில் புதுச்சேரியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்றார்.

அந்த காரில் தெரசா டெல்பின், இவரது குழந்தை ஜெயிலி கிளாடியா, ரேகா, நந்தனா, மிருதுளா, ரேகாவின் அக்காவான  ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சரவணன் மனைவி இந்துமதி(36), இவரது மகள் மகாலட்சுமி(14) ஆகியோர் ஏறினர். காரை பிரவின்குமார் ஓட்டினார்.

கார், கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10.30 மணிக்கு வந்தது. அப்போது காரின் பின்பக்கமுள்ள இடதுபுற டயர் திடீரென வெடித்தது. இதில் பிரவின்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி நடுரோட்டில் 3 முறை உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் இந்துமதி, மாணவி நந்தனா ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த பிரவின்குமார், ரேகா, தெரசா டெல்பின், 2½ வயது கைக்குழந்தை ஜெயிலி கிளாடியா, மிருதுளா, மகாலட்சுமி ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரவின்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்