கார்-லாரி மோதல்; டிரைவர் பலி

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார், லாரி மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-12 18:32 GMT

சாலை விபத்து

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாலமுத்தூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த புகழ்(வயது 23), கோவிலூர் பாண்டியராஜன்(41), நெடுவாய் கோட்டை அறிவழகன் (42), செல்வராஜ்(60), பின்னையூர் ஜெயபால்(50), தமையன் குடிக்காடு அன்பரசு(43), சன்னம் பட்டி சேட்டு(40). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர்கள் 7 பேரும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் ஆவார்.

இவர்கள் சென்னை ராயப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு காரில் சென்னை சென்றனர். காரை புகழ் ஓட்டினார். பின்னர் கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவு பெரம்பலூர் வழியாக தங்களது சொந்த ஊரான ஒரத்தநாட்டிற்கு சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரியலூர் செல்லும் சாலையில் தங்க நகரம் கிராமத்தின் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி வலது புறமாக ஏறி வந்ததாகவும், பின்னர் இடதுபுறம் திரும்பிய போது லாரியின் டேங்கர் பகுதியில் காரின் வலது புறம் மோதியது.

டிரைவர் பலி

இதில் சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் புகழ் உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேட்டுவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கார் டிரைவர் புகழை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த அனைவரையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியை ஓட்டிவந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்