கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் இனி ரூ.1,000 மட்டுமே கட்டணம் - பத்திரப்பதிவு துறை அறிவிப்பு

கிரைய பத்திரம் பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலித்து வருகிறது.

Update: 2024-05-14 22:08 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ஒரு நிலம்-வீடு என எந்த சொத்து வாங்கினாலும் அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரைய பத்திரமாக பதிவு செய்வார்கள். இந்த பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலிக்கிறது.

கிரையம் முடித்தவர்கள், மீண்டும் அந்த கிரையத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடமுண்டு. இருதரப்பும் சேர்ந்து இந்த ரத்து ஆவணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு ரூ.50 கட்டணம் ஆகும். ஆனால் அந்த பத்திரத்தில், 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது' என்று ஒரு முத்திரை குத்தப்படும். அதாவது இந்த ரத்து ஆவணம் மூலமும் புதிதாக சொத்து வாங்கியவர்கள் பெயரிலேயே அந்த சொத்து இருக்கும். எனவே கிரைய ரத்து செய்வதால் எந்த பலனும் இல்லாமல் இருந்தது. அதனால் பெரும்பாலானோர் கிரைய ரத்து ஆவணம் செய்வதற்கு பதில் மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் செய்தனர்.

அதனால் மீண்டும் அவர்கள் 9 சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கிரைய ரத்து ஆவணத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி தரகூடிய ஒரு செய்தியை பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் அதற்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்த பத்திரத்தில் முன்பு இருந்த நடைமுறையான 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது' என்ற முத்தி்ரை இனி குத்தப்படாது. இதன் மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் சொத்து சென்று விடும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்