ஈஷா மையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து
ஈஷா மையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது? என விளக்கம் கேட்டு ஈஷா யோகா மையத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஈஷா அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிற்பகலில் நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், ''ஈஷா யோகா மையம் வளாகத்தில் 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தில் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளது.
எனவே, மத்திய அரசு விதிகளின்படி ஈஷா மையம் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும். எனவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.