19 கடைகளின் உரிமம் ரத்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே விவசாயிக்கு அதிக யூரியா, உரங்கள் விற்பனை செய்த 19 கடைகளின் உரிமம் ரத்து செய்து வேளாண்மை அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே விவசாயிக்கு அதிக யூரியா, உரங்கள் விற்பனை செய்த 19 கடைகளின் உரிமம் ரத்து செய்து வேளாண்மை அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உரிமம் ரத்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து காரீப் மற்றும் ராபி பருவங்களில் மாதந்தோறும் யூரியா விற்பனை செய்த சில்லரை விற்பனையாளர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, யூரியா ரசாயன உரத்தின் பயன்பாட்டை குறைக்கவும், யூரியா, ரசாயன உரம் விவசாயம் தவிர பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் இருக்கவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் உரக்கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2022-23-ம் ஆண்டு காரீப் பருவத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒரே விவசாயிக்கு அதிக அளவில் யூரியா, உரங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 19 சில்லரை உரக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிகளை மீறும் உர விற்பனை நிலையங்களின் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விவசாயிகள் ஆதார் அட்டையுடன் சென்று உரங்களை பெற்று அதிக மகசூல் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.