கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் ரூ.2 லட்சம் கொள்ளை; போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி துணிகரம்

சென்னையில் கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-06 05:12 GMT

கனடா சுற்றுலா பயணி

கனடா நாட்டில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்தவர் ஸ்ரீதரன் தாஸ் ரத்தினம் (வயது 66). இவர், கனடா நாட்டு அரசில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, மூசாசாகிப் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் தியாகராயநகரில் உள்ள பணமாற்று நிறுவனத்தில், டாலர் நோட்டுகளை இந்திய பணமாக மாற்றி விட்டு வந்தார். அப்போது மர்மநபர் ஒருவர், "நானும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளேன். எனக்கு தங்க சரியான இடம் கிடைக்கவில்லை, உங்களுடன் தங்க இடம் கிடைக்குமா? என்று ஸ்ரீதரன்தாஸ் ரத்தினத்திடம் நைசாக பேச்சு கொடுத்தார். அந்த நபர் சொன்னதை உண்மை என்று நம்பி, அவரை தன்னுடன் தங்க வைத்துக்கொள்வதாக தாஸ் ரத்தினம், சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்து வந்தார்.

போதைப்பொருள் தடுப்பு போலீஸ்

தங்கி இருந்த விடுதி அறைக்கு வந்தவுடன், பின்னால் வந்த இன்னொரு நபர், தான் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று கூறி தாஸ் ரத்தினம் தங்கி இருந்த அறையை சோதனை போடுவது போல நடித்தார். பின்னர் தாஸ் ரத்தினம் கையில் வைத்திருந்த ரூ.1.10 லட்சம் மற்றும் பொருட்களை பறித்தார். பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். தாஸ்ரத்தினத்துடன் தங்க இடம் கேட்டு வந்தவரும், போலீஸ் என்று சொல்லி பணம், பொருட்களை பிடுங்கிச்சென்றவரும் சேர்ந்து மின்னல் வேகத்தில் வெளியில் தப்பிச்சென்றுவிட்டார்கள்.

கொள்ளை சம்பவம்

அதன்பிறகுதான் தாஸ்ரத்தினத்துக்கு, தன்னிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிப்பதற்குதான், தங்கஇடம் கேட்டு வந்தவரும், போலீஸ் என்று சொல்லி வந்தவரும் நாடகமாடி உள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்த நூதன கொள்ளைச்சம்பவம் குறித்து தாஸ் ரத்தினம் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற நபர்களை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்