பூட்டிக் கிடக்கும் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?

கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனை ெவளிப்புற வளாகத்தில் பூட்டிக் கிடக்கும் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update:2023-02-09 00:15 IST

அரசு தலைமை மருத்துவமனை

கரூர் நகரின் மையப் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கடந்த பல ஆண்டுகளாக அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் என நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனா்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மருத்துவமனைக்கு புறநோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வரும்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக மருத்துவமனையின் வெளிப்புறம் அமைந்துள்ள வளாகத்தில் கழிவறைகள் அமைக்கப்பட்டன. இந்த கழிவறையை மருத்துவமனைக்கு வருபவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

சித்தா பிரிவு

கரூர் காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. இதனால் இங்கு இயங்கி வந்த மருத்துவ பிரிவு முழுமையாக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்போது பழைய அரசு மருத்துவமனையில் நீரிழிவு, ரத்த அழுத்தம், சித்தா மருத்துவம், கண் அறுவை சிகிச்சை, யோகா தெரபி, மாற்றுத்திறனாளி பிரிவு உள்ளிட்ட பிரிவு மருத்துவர்கள் இங்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதனால் இங்கும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் அவர்களுடன் உதவியாளர்களும் வந்து செல்கின்றனர்.

கோரிக்கை

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையின் வெளிப்புற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கழிவறைகள் இயங்காமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதன் காரணம் என்று தெரியவில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பூட்டப்பட்டுள்ள கழிவறையை திறந்து நாள்தோறும் சுத்தம் செய்து பயன்படுத்தி வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

உடனடியாக திறக்க வேண்டும்

கரூரை சேர்ந்த வெங்கட்ராமன்:- மருத்துவமனையில் தற்போது சித்தா உள்பட ஒரு சில பிரிவுகள் மட்டும் இயங்கி வருகிறது. நாள்தோறும் இங்கு ேநாயாளிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். நோயாளிகளுடன் உதவியாளர்களும் வருகின்றனர். இதனால் அவர்கள் இயற்கை உபாதை கழிக்க ஏதுவாக மருத்துவமனையின் வெளிப்புற வளாகத்தில் கழிவறை கட்டப்பட்டு இருந்தது. அதனை நோயாளிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பல மாதங்களாக கழிவறை இல்லாமல் தினமும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதனை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

காசு கொடுத்து செல்ல வேண்டும்

சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமி:-

பழைய அரசு தலைமை மருத்துவமனை ஒரு காலத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இருந்தது. அப்போது வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக மருத்துவமனையின் ெவளிப்புற வளாகத்தில் கழிவறை ஏற்படுத்தி தரப்பட்டது. தற்போது மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு தினமும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் உள்ள கட்டண கழிவறையை நாடி செல்ல வேண்டியது உள்ளது. எனவே நோயாளிகளின் நலன் கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரபரப்பாக காணப்படும்

தாந்தோணிமலையை சேர்ந்த சரவணன்:-

பழைய அரசு தலைமை மருத்துவமனை சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் பயன்பாட்டில் இ்ல்லாமல் மூடி கிடக்கும் கழிவறையை சுத்தம் செய்து திறந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதுகுறித்து நோயாளிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்