சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update: 2022-11-03 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, பழையனூரில் வெண்ணாற்றின் கரையோரத்தில் அப்பகுதி விவசாயிகள் பயன்பாட்டிற்காக பாசன வாய்க்கால் மதகு அமைக்கப்பட்டது. அதன் மேல்‌ பகுதியில் தரைபாலம் அமைக்கப்பட்டு இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

இந்த பாசன வாய்க்கால் மூலம் காக்கையாடி மற்றும் மாதாகோவில் கோம்பூர் பகுதியில் உள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

சேதமடைந்த மதகு

இந்த நிலையில், இந்த பாசன வாய்க்கால் மதகு கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட மதகு திறப்பு பலகை உடைந்து சேதமடைந்து உள்ளதால் தண்ணீர் தேவையான நேரத்தில் திறக்கவோ, தேவையில்லாத போது மூடவோ முடியாத நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் ஆற்றில் இருந்து அதிக அளவில் செல்லும் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் மதகின் மேல்பகுதியில் உள்ள தரைபாலத்தின் தடுப்பு சுவர்கள் இரண்டு பக்கமும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

சீரமைக்க வேண்டும்

இரவு வாகனங்களில் இந்த சாலை வழியாக வருபவர்கள் தடுமாறி வாய்க்காலில் விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு திறப்பு பலகையையும், தரைப்பாலத்தில் இடிந்து விழுந்துள்ள தடுப்பு சுவரையும் சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வயல்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது

இதுகுறித்து மாதாகோவில் கோம்பூரைச் சேர்ந்த விவசாயி பீட்டர் கூறுகையில் பழையனூர் பாசன வாய்க்கால் மூலம் காக்கையாடி, மாதாகோவில் கோம்பூர் பகுதியில் 260 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பாசன வாய்க்கால் மதகு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து பொருத்தப்பட்ட மதகு திறப்பு பலகை சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீரை தடுக்க முடியவில்லை. இதனால், ஆற்றில் இருந்து வரும் தண்ணீரும், மழைநீரும் வயல்களில் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சேதமடைந்த மதகு மற்றும் திறப்பு பலகையை சீரமைக்க வேண்டும்.

நெற்பயிர்கள் சேதம்

கோம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி அழகேசன்:- பாசன வாய்க்கால் மதகு மற்றும் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வயல்களுக்கு தேவையில்லாத தண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. பல ஆண்டு களாக மதகு பழுதடைந்த நிலையில், அதனை முறையாக சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நெற்பயிர்கள் சேதம் அடைகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்