கோடநாடு கொலை குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோடநாடு கொலை குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Update: 2023-02-25 23:13 GMT

கோடநாடு கொலை குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

முதல்-அமைச்சர் பிரசாரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோட்டில் பரப்புரை பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பி.பி.அக்ரகாரம் பகுதியில் பிரசாரம் செய்து பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு இருந்தது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீஸ் டி.ஜி.பி. மீது குட்கா வழக்கு போடப்பட்டது. எல்லாவற்றிலும் கொள்ளையடித்தார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் என்று கூறும் அ.தி.மு.க.வினர் அவர் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மக்களுக்கு உண்மையை கூறினார்களா?. இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார். டி.வி. பார்த்தார் என்று நாட்டு மக்களிடம் பொய் கூறி உண்மையை மறைத்தார்கள்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்

ஜெயலலிதா நமக்கு எதிரிதான். ஆனால், அவர் இந்த நாட்டின் முதல்-அமைச்சராக இருந்தவர். முதல்-அமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது அதுபற்றிய அலுவலக ரீதியான அறிக்கையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.

அறிஞர் அண்ணா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் அப்படி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் மரணம் மூடி மறைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்று நாம் சந்தேகம் எழுப்பவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினார். பின்னர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த விசாரணை கமிஷன் விசாரணையை நம் தி.மு.க. ஆட்சி வந்தபிறகுதானே முடித்து, மக்களுக்கு தெரியவைத்தோம்.

கோடநாடு வழக்கு

இதுபோல் கோடநாட்டில் உள்ள மாளிகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுத்தார். அவர் மரணத்தை தொடர்ந்து கோடநாட்டில் கொலை கொள்ளைகள் நடந்தன.

அதுபற்றிய விசாரணையும் முழுமை அடையவில்லை. நம் ஆட்சி வந்த பிறகு அந்த வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உள்ளானவர்கள் யார் என்பது விரைவில் தெரியும். கோடநாடு வழக்கில் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு யார் காரணமாக இருந்திருந்தாலும் அவர்கள் ஜெயிலுக்கு செல்வது உறுதி.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்