அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக புகார்: நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பிரசாரத்ைத தடுக்க வந்த போலீசாருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பிரசாரத்ைத தடுக்க வந்த போலீசாருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன் அனுமதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் வேட்பாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் வாகன பிரசாரம், திண்ணை பிரசாரம், வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்வதற்கும் முன் அனுமதி பெற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டா்கள் ஈரோடு காளைமாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, சம்பத்நகர், மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப்ரோடு), காவிரிரோடு உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடிகள், சின்னத்துடன் நின்று கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
வாக்குவாதம்
ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று காலை பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டதா? என்று கேட்டனர். அப்போது அவர்கள் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதையடுத்து பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 8 பேரை போலீசார் வேனில் ஏற்றி சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், நாம் தமிழர் கட்சியினர் பலர் சூரம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள கட்சியினரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முறையாக அனுமதி பெற்று பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.
துணை ராணுவம்
இதேபோல் சம்பத்நகரில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். இதனால் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த செல்போனை தட்டிவிட்டார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு துணை ராணுவனத்தினரும் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, உரிய அனுமதி பெற்று பிரசாரம் செய்யவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவிலும் நாம் தமிழர் கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையே அனுமதி இல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தலைமையில் கட்சியினர் புகார் மனு அளிக்க வந்தனர்.
வேட்பாளர் மனு
அப்போது வேட்பாளர் மேனகா நவநீதன் கூறியதாவது:-
நாங்கள் முறையாக அனுமதி பெற்று பிரசாரம் செய்கிறோம். வாகனங்களுக்கு அனுமதி பெற்று உள்ளோம். ஆனால், தி.மு.க.வினர் எந்த அனுமதியும் பெறாமல் திண்ணை பிரசாரம், வீதி பிரசாரம், வாகனங்களில் அணி வகுப்பு பிரசாரம் செய்கிறார்கள். எங்களது வெற்றியை தடுக்க தேர்தல் ஆணையமும், போலீசாரும் முயற்சி செய்கிறார்கள்.
ஈரோடு சம்பத் நகர், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சி கட்சியினர் சுமார் 40 பேரை போலீசார் பிடித்து வைத்து உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து புகாரை எழுத்து பூர்வமாக கொடுத்தால், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறினார். அதன்பிறகு நாம் தமிழர் கட்சியினர் மனுவாக எழுதி கொடுத்தார்கள்.
ஈரோட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.