ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து சமூகநீதி மக்கள் கட்சியினர் தேர்தல் பிரசாரம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து சமூகநீதி மக்கள் கட்சியினர் தேர்தல் பிரசாரம்

Update: 2023-02-24 22:03 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து சமூகநீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் கட்சியினர் ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஈரோடு முனிசிபல்காலனி, ஆலமரத்தெரு, ராஜாஜிபுரம், வெண்டிபாளையம் உள்பட 28 பகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்கள் திண்ணை பிரசாரம் செய்தனர். அப்போது ஆதி திராவிட சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை கடந்த 2009-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தது. அதன் மூலமாக அரசு உயர் பதவிகளில் வாய்ப்பு கிடைத்தது. 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று ஈரோட்டில் டாக்டர் அம்பேத்கர் சிலையை தனது சொந்த செலவில் அமைச்சர் சு.முத்துசாமி அமைத்து கொடுத்தது. அந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது என தி.மு.க. அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சமூகநீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன் விளக்கி கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.2 கோடி 60 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தது, பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது, ஆதி திராவிடர் நல ஆணையம் அமைத்தது, சமூக நீதி கண்காணிப்பு குழு அமைத்தது, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்தது, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடுவது என தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்துக்கு வாக்களித்து வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த பிரசாரத்தின்போது நிர்வாகிகள் எம்.கே.ஆறுமுகம், வி.எஸ்.சண்முகம், ஆர்.கண்ணையன் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்