புதிய கல்விக்கொள்கை என்பது நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எழுதும் மரண சாசனம்- ஈரோட்டில் சீமான் பேச்சு

புதிய கல்விக்கொள்கை என்பது நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எழுதும் மரண சாசனம் என்று ஈரோட்டில் சீமான் பேசினார்.

Update: 2023-02-23 22:15 GMT

புதிய கல்விக்கொள்கை என்பது நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எழுதும் மரண சாசனம் என்று ஈரோட்டில் சீமான் பேசினார்.

மரண சாசனம்

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, ரெயில் நிலையம், காளை மாடு சிலை, கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அதைத்தொடர்ந்து கொல்லம்பாளையம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு இலவசம் தரமாட்டேன். ஆனால் நான் தரும் இலவசம் கல்வி. உலக தரம்மிக்க மருத்துவம் ஆகும். நான் கடந்த 10 ஆண்டுகளாக கூறி வந்ததை, இன்று மத்திய அரசு கூறி உள்ளது. குழந்தைகளை 6 வயது முடிந்தவுடன் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று. இவர்கள் கொண்டு வரும் புதிய கொள்கைப்படி 8 வயதில் பொதுத்தேர்வு எழுதவேண்டும். இந்த புதிய கல்விக்கொள்கை என்பது நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எழுதும் மரண சாசனம் என்று சிறந்த கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆட்கள் பற்றாக்குறை

எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி வருகிறார்கள். முதலில் அரசு மருத்துவமனையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்கி, அதன் தரத்தை உயர்த்துங்கள். அப்படியே எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தாலும் அதில் டாக்டர்களாக பணியாற்றுபவர்கள் இந்திக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் எப்படி தமிழர்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பார்கள்.

நமக்கு ஒரே ஒரு குலதெய்வம் தான் இருக்கிறது. அது விவசாயம். உலகத்திற்கு சோறு போடுபவன் தான் விவசாயி. எனவே எங்களுக்கு ஒரு முறை வாக்களியுங்கள். இந்தியை எதிர்த்தார்கள். ஆனால் இங்கு இந்திக்காரர்களே வந்துவிட்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு

சத்தியத்தை பேச வேண்டும். அதை சத்தமாக பேச வேண்டும். உண்மையை பேச வேண்டும். அதை உறக்க பேச வேண்டும். அதுதான் எங்கள் கோட்பாடு. மலர் மாலைக்கு கழுத்தை நீட்டுவது போல், மரணத்துக்கும் கழுத்தை நீட்டுவதுதான் உன்மையான வீரம். அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு.

எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூற மக்களிடம் எனக்கு உரிமை உள்ளது. ஆனால். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்யாத நல்லதை அடுத்த 3½ ஆண்டுகளில் செய்யப்போகிறீர்களா. சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல. இடப்பங்கீடுதான்.

மக்களை நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். எங்களை நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்