நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இறுதி கட்ட பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-22 09:34 GMT

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட முருக்கம்பட்டு, தாழவேடு, அருங்குளம் ஆகிய பகுதியில் வீடுகள் இல்லாத, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. முருக்கம்பட்டு பகுதியில் 4 மாடிகளில் 1,040 குடியிருப்புகள் ரூ.135.22 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இதில் ரூ.7 லட்சம் தமிழ்நாடு அரசின் மானியமாகவும், ரூ.1.50 லட்சம் மத்திய அரசின் மானியமாகவும் வழங்கப்படவுள்ளது. பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.50 லட்சம் ஆகும்.

தாழவேடு திட்டப்பகுதியில் 4 மாடிகளில் 520 குடியிருப்புகள் ரூ.67.34 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.12.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.45 லட்சம் ஆகும்.

அருங்குளம் பகுதி-I திட்டப்பகுதிகளில் 5 மாடிகளில் 432 குடியிருப்புகள் ரூ.57.67 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13.35 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.85 லட்சம் ஆகும்.

அருங்குளம் பகுதி-II திட்டப்பகுதிகளில் 5 மாடிகளில் 912 குடியிருப்புகள் ரூ.119.97 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.65 லட்சம் ஆகும்.

அருங்குளம் பகுதி-III திட்டப்பகுதிகளில் 5 மாடிகளில் 768 குடியிருப்புகள் ரூ.99.85 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.4.50 லட்சம் ஆகும். அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 3 மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்ட உதவி நிர்வாக பொறியாளர் கூறுகையில்:

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு இடங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மக்களுக்கு இப்பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். வீடுகள் ஒதுக்கீடு கோரும் நபரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகலை இணைத்து திருவள்ளூர் நிர்வாகப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் நேரடியாக விண்ணப்பம் அளிக்கலாம். இந்த மனுக்களை கலெக்டர் ஆய்வு செய்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வார். இதுவரை 40 சதவீதம் பேர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்