கூடலூர் அருகே கண்காணிப்பு கோபுரத்தால்பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது-அதிகாரிகள் உறுதி

கூடலூர் அருகே கண்காணிப்பு கோபுரம் கட்டுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் உறுதிஅளித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2023-09-22 18:45 GMT

கூடலூரில் ஆர்.டி.ஓ. தலைமையில் காந்திநகர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது எடுத்த படம்.

கூடலூர்: கூடலூர் அருகே கண்காணிப்பு கோபுரம் கட்டுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் உறுதிஅளித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது.

கண்காணிப்பு கோபுரம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி பாதித்து வருவதாக பல்வேறு போராட்டங்களில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இரவு, பகலாக வன ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது.அதன்படி தற்போது கண்காணிப்பு கோபுரங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் காந்திநகர் பகுதியில் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் கட்ட வனத்துறை முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில்தான் கோபுரம் கட்டப்பட உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்களிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படாத பொதுமக்கள், கண்காணிப்பு கோபுரம் கட்டவுள்ள நிலத்தை வரையறை செய்யக்கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேஸ்வரி, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத்தலைவர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து போராட்டக்குழுவை சேர்ந்த ஆனந்தராஜ் உள்பட கிராம மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் கட்டுவதால் வனத்துறையால் வரும் நாட்களில் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் விவசாய நிலங்களை மறு வரையறை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

எந்த பாதிப்பும் ஏற்படாது

இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் அரசின் முடிவுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் கோபுரம் கட்டுவதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் கிராம மக்களுக்கு உறுதியளித்தனர். பின்னர் முடிவில் கிராம மக்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்