அம்மாபேட்டை அருகே பரபரப்பு: தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஏற்பட்டது.

Update: 2023-09-09 22:33 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உறவினர் என்று கூறிய வாலிபருடன் மாணவியை அனுப்பி வைத்ததால், எஸ்.இ.டி. பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

9-ம் வகுப்பு மாணவி

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சியில் எஸ்.இ.டி. என்ற தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 750 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

பூனாச்சி கொண்டையன் கொட்டாய் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்தார். அப்போது அன்று மாலை வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வந்து, சம்பந்தப்பட்ட மாணவியின் மாமா நான் என்று கூறி மாணவியை அழைத்து சென்றதாக தெரிகிறது.

பெற்றோர் புகார்

இந்தநிலையில் மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் வந்து மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதைக்கேட்ட பெற்றோர் யார் என்று விசாரிக்காமல் எப்படி மாணவியை அனுப்பி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை போலீசிலும் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை அழைத்து சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முற்றுகை-சாலை மறியல்

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள் என 100-க்கு மேற்பட்டவர்கள் நேற்று காலை அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் மெயின்ரோட்டில் எஸ்.இ.டி. பள்ளிக்கூடம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் ஒன்றாக சென்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் பெற்றோர் அனுமதி இல்லாமல் மாணவியை யாரோ ஒருவருடன் அனுப்பி வைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக மாணவியை மீட்டுத் தரக் கோரியும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்கள் போலீசாரிடம், 'பள்ளிக்கு வந்த வாலிபர் ஒருவர் உறவினர் என்று பொய் கூறி மாணவியை கடத்தி சென்று விட்டார். கடந்த மாதம் உள்ளூர் பண்டிகைக்காக ஒரு மணி நேரம் முன்னதாக மாணவியை அனுப்பிவைக்குமாறு பள்ளிக்கு வந்து தந்தை அழைத்தார். அப்போது மாணவியை அனுப்பாத நிர்வாகத்தினர், தற்போது யாரோ ஒருவருடன் மாணவியை அனுப்பி வைத்துள்ளனர். எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டு வர தனிப்படை அமைத்திருப்பதாகவும், முைறயாக விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிடப்பட்டதால் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு வரை பள்ளியை முற்றுகையிடும் போராட்டம் தொடர்ந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்