சேத்தியாத்தோப்பில் பஸ்கள் மோதல்; 15 பேர் காயம்

சேத்தியாத்தோப்பில் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-06-11 18:45 GMT

சேத்தியாத்தோப்பு,

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை அரசு பஸ் ஒன்று கும்பகோணத்துக்கு புறப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதவன்(வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் மதியம் 12 மணியளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ்சும், கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. தனியார் பஸ்சின் முன்பகுதியும் சேதமானது. பஸ்களில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

15 பேர் காயம்

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இதில் பஸ் டிரைவர் மாதவன்(47), குத்தாலம் மாம்புலியை சேர்ந்த கண்டக்டர் ராஜேந்திரன்(44), விஜயகுமார்(45), பஸ்களில் பயணம் செய்த திருவிடைமருதூர் கதிராமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வி(29), மயிலாடுதுறை அருகே உள்ள சித்தார்காட்டை சேர்ந்த ஆல்பர்ட் எடிசன்(31), நெய்வேலியை சேர்ந்த சுப்பிரமணியன்(50), பாளையங்கோட்டையை சேர்ந்த ராணி(30), உடையார்பாளையத்தை சேர்ந்த விஜயபாலன்(43) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்