கார்கள் மோதியதில் பஸ் டிரைவர் பலி
கொடைரோடு அருகே கார்கள் மோதியதில் பஸ் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார்கள் மோதல்
கோவையை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 30). நேற்று இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் கோவையில் இருந்து காரில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த மாதா கோவில் திருவிழாவுக்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சிவபிரசாத் ஓட்டினார். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே பாண்டியராஜபுரம் என்ற இடத்தில் கார் வந்தது.
அப்போது பின்னால் அய்யலூரை சேர்ந்த பிரபு என்பவா் ஓட்டி வந்த கார், சிவபிரசாத் காரின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த கார் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த 2 கார்களும் தாறுமாறாக ஓடின.
பஸ் டிரைவர் பலி
அப்போது 2 கார்களும் சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள்களில் அமர்ந்து இருந்த 3 பேர் மீதும் மரத்தடியில் இருந்த ஒருவர் மீதும் மோதி பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் ஒரு கார் பாய்ந்த வேகத்தில் பள்ளத்தில் இருந்து மேலே ஏறி அங்கு உள்ள தண்டவாளத்தில் போய் நின்றது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தண்டவாளத்தில் இருந்து காரை தள்ளிவிட்டு கீழே இறக்கினர்.
கார்கள் மோதியதில் மரத்தடியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த வடகாட்டுபட்டியை சேர்ந்த தனியாா் பஸ் டிரைவரான பாண்டி (58) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார்சைக்கிள்களில் இருந்த மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்த குருநாதன் (54), மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த விக்னேஷ் (30), மதுரை வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியைச் சேர்ந்த ராஜ்குமார் (36) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பிரபு காரில் வந்த அவரது தந்தை சின்னாத்தேவரும் படுகாயம் அடைந்தார்.
போலீசார் விசாரணை
விபத்து பற்றி தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த குருநாதன், விக்னேஷ், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னாத்தேவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தில் பலியான பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.