நாமக்கல் மாவட்டத்தில் 2-வது முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 2-வது முறையாக அரசு பஸ்சில் பெண் கண்டக்டர் நியமனம்

Update: 2022-06-24 18:50 GMT

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்லில் 2 பணிமனைகள், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு என 4 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலம் 171 நகர, புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 600-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் வாரிசு அடிப்படையில் 10 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த டிக்கெட் பரிசோதகரான முனியப்பன் என்பவரது மகள் இளையராணிக்கு (வயது 34) கண்டக்டராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இவர் கடந்த சில நாட்களாக ராசிபுரம்- சேலம் இடையே இயக்கப்படும் டவுன் பஸ்சில் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஆகும். அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் தொடர்ச்சியாக பஸ்சுக்குள் அங்கும், இங்கும் நடந்தபடி டிக்கெட்டை வழங்குவது, பஸ் நிறுத்தங்களில் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பது என சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.


இதுகுறித்து இளையராணி கூறியதாவது:- எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம், தந்தை இறந்து விட்டதால் வாரிசு வேலை கிடைத்தது. இப்பணிக்காக ஒரு மாதம் பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை செயலாளர் பிரகாசம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் பணிமனையில் சிங்காரி என்கிற பெண் கண்டக்டராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். பின்னர் அவர் சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இடமாறுதலில் சென்றார். தற்போது சேலம்- பெங்களூரு இடையே இயக்கப்படும் பஸ்சில் பணியாற்றி வருகிறார். தற்போது நியமிக்கப்பட்டு உள்ள இளையராணி இந்த மாவட்டத்தின் 2-வது பெண் கண்டக்டர் ஆவார். ஆனால் ராசிபுரம் பணிமனையில் முதல் பெண் கண்டக்டராக இளையராணி நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்