குண்டும், குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்பால் பாதிப்பு

குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்பு மற்றும் தெருநாய் தொல்லையால் பாதிப்பு ஏற்படுவதால் உடனே சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-08-29 15:00 GMT

கோவை

குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்பு மற்றும் தெருநாய் தொல்லையால் பாதிப்பு ஏற்படுவதால் உடனே சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி:-

மாநகராட்சி வார்டு நிதி ரூ.5 லட்சமாக உள்ளதை உயர்த்தி கொடுக்க வேண்டும். மண்டல நிதியையும் உயர்த்த வேண்டும். தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. புதிய தெருவிளக்கு பொருத்த வேண்டும். தெருநாயை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூர், உக்கடம் தெருநாய் கருத்தடை மையங்கள் முழுமையாக செயல்பட வேண்டும்.

ரூ.20 கோடி

மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்:-

கோவை நகரில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது. முதல் கட்டமாக ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 13 மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 நாப்கின் வழங்கும் எந்திரங்கள், 50 நாப்கின் எரியூட்டும் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. நகரமைப்பு பிரிவில் 1000-க்கும் மேலான மனுக்கள் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது. அதற்கு விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தெருவிளக்கு பராமரிப்புக்காக விரைவில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. உக்கடத்திலும் தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு ஆகியோர் பேசும்போது, சூயஸ் திட்டத்தில் பள்ளம் தோண்டினால் மூடுவது இல்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபராதம் விதிக்க உத்தரவு

மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்:- சூயஸ் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும்போது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். தோண்டிய குழியை மூடாவிட்டால் அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும்.

சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன்:- மாநகராட்சி பணியாளர்கள் 135 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்க ளுக்கு பதிலாக புதியவர்களை நியமித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ராஜவாய்க்கால், சேதுமவாய்க்கால்களை தூர்வார வேண்டும். செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள் கட்டிக்கொடுக்க ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மாமன்ற முதல்வர்

ஆளும்கட்சி தலைவர் கார்த்திகேயன்:- கோவை மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் தெருநாய் தொல்லை உள்ளது. குறிச்சி பகுதியில் பன்றி வளர்ப்பவர்களால் பாதிப்பு ஏற்படுகிறது. பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

அழகுஜெயபாலன் (காங்கிரஸ்) கோவை மாநகராட்சி மேயரை மாமன்ற முதல்வர் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆர்.எஸ்.புரம் பகுதியில் வடிகால் வசதி இல்லாத தால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

கவுன்சிலர் பிரபாகரன் (அ.தி.மு.க.):- அதிகாரிகள் திட்டங்களை சரியாக தயாரிப்பதும் இல்லை. செயல்படுத்துவதும் இல்லை என்றார்.அப்போது குறுக்கிட்ட மேயர் கல்பனா:- 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது அதிகாரிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கவுன்சிலர் பூபதி (இந்திய கம்யூனிஸ்டு):- டைடல் பார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு சாலையை கடக்க கப்பல் விட வேண்டிய நிலைமை உள்ளது.

கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.):- எங்களது வார்டில் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.

மேலும் செய்திகள்