சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்நோக்கி வீரர்கள்: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்நோக்கி வீரர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்தும் பணியும், நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Update: 2022-12-18 18:27 GMT

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். பொங்கல் பண்டிகைக்கு மட்டுமில்லாமல் கோவில் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் ஜல்லிக்கட்டு நடைபெறும். சிவகங்கை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் அழைத்துவரப்படுவது உண்டு. காளைகளை அடக்க வீரர்களும் அதிகம் வருவார்கள்.

இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு கடந்த ஜனவரி மாதம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காளைகளுக்கு எந்த கொடுமையும் நடைபெறவில்லை, ஜல்லிக்கட்டு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பிலும் மூத்த வக்கீல்கள் வாதாடி தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் உள்ளனர்.

காளைகளுக்கு பயிற்சி

இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு புறம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து பயிற்சி கொடுத்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி விழாக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க தயாராகி வருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்