மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே வம்பரம்பட்டி கிராமத்தில் குட்டி ஆண்டவர் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 31 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.
முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 9 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 11 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இதில் முதல் பரிசு மதுரை அவனியாபுரம் எஸ்.கே.ஆர், 2-ம் பரிசு கீழவளவு சக்தி, 3-ம் பரிசு சண்முகாபுரம் சத்தியா, 4-ம் பரிசு குண்டு ஏந்தல்பட்டி பவதாரணி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
பரிசு
இதனை தொடர்ந்து நடைபெற்ற நடு மாடு பிரிவில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதன் பந்தய தொலைவு போய் வர 7 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு சண்முகாபுரம் சத்யா, 2-ம் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், 3-ம் பரிசு நடுக்காவேரி கண்ணன், 4-ம் பரிசு தானாவயல் வெங்கடாசலம் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நின்று கொண்டு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.