ஆரணி
ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் 65-வது ஆண்டு காளை விடும் விழா இன்று நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 15 மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றன.
காளை விடும் விழாவை கண்டுகளிக்க காளையர்கள், இளைஞர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். விழாவையொட்டி நடமாடும் மருத்துவக் குழுவினர்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்புத்துறை வாகனங்களும் தயாராக இருந்தது.
இதில் மாடு முட்டியதாலும், மாடு தள்ளியதாலும் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பகுத்தறிவு மாமது, கீதா மோகன், அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயணி அன்பழகன், குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ. 1லட்சத்து 11 ஆயிரத்து 111 உள்பட 65 பரிசுகள் வழங்கப்பட்டன.