வாடகை செலுத்தாததால் குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு கட்டிட உரிமையாளர் உண்ணாவிரதம்

16 மாதங்களாக வாடகை செலுத்தாததால் குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு கட்டிட உரிமையாளர் உண்ணாவிரதம் இருந்தார்.

Update: 2023-09-07 18:56 GMT

குன்னம் தாலுகா அலுவலகம் கடந்த 1999-ம் ஆண்டு குன்னம்-பெரம்பலூர் ரோட்டில் குன்னம் போலீஸ் நிலையம் அருகே கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் லட்சுமிகாந்த் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் குன்னம் தாலூகா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த 16 மாதங்களாக கட்டிட உரிமையாளருக்கு குன்னம் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாடகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட லட்சுமி காந்த், குன்னம் தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் வாடகை பணம் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அவர் குன்னம் தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் தாசில்தார் அனிதா மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒரு வார காலத்திற்குள் 16 மாத வாடகையை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்