ராணுவ முகாம் சாலையில் காட்டெருமைகள் உலா
குன்னூர் அருகே ராணுவ முகாம் சாலையில் காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர் அருகே ராணுவ முகாம் சாலையில் காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டெருமைகள் நடமாட்டம்
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் உலா வந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு முன்பு கிராமப்புறங்களில் நடமாடிய காட்டெருமைகள், தற்போது நகர பகுதிகளிலும் உலா வருகின்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை ஒன்று குன்னூர் நகர முக்கிய பகுதியான மவுண்ட் ரோட்டில் நடமாடியது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து சாலைேயாரம் உள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர்.
வாகனங்கள் நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று காலை குன்னூர் அருகே வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் எதிரே உள்ள சாலையில் காட்டெருமைகள் கூட்டம் முகாமிட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து அங்கிருந்த கடை வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து காட்டெருமைகளை விரட்டினர். சுமார் அரை மணி நேரம் கழித்து காட்டெருமைகள் அருகில் உள்ள முருகன் கோவில் வழியாக பிளாக் பிரிட்ஜ் வனப்பகுதிக்கு சென்றன. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.