இயற்கை சீற்றங்களால் புதைந்த பக்கிங்காம் கால்வாய்

இயற்கை சீற்றங்களால் பக்கிங்காம் கால்வாய் புதைந்தது.

Update: 2022-12-08 18:45 GMT

பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் வளர்ச்சி நீர்வழி போக்குவரத்தை சார்ந்தே அமைந்தது. இதன் மூலமே ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு நாடு விட்டு நாடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. கடல் வழி போக்குவரத்தை தவிர, கால்வாய் மூலமும் போக்குவரத்து நடைபெற்றது. இதற்காக கடற்கரையோரம் அமைந்துள்ள பல முக்கிய ஊர்களை இணைக்கும் வகையில் செயற்கையாக கால்வாய்களும் வெட்டப்பட்டது.

பக்கிங்காம் கால்வாய்

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய போக்குவரத்து தடமாக இருந்த பக்கிங்காம் கால்வாய் ஆரம்ப காலத்தில் போக்குவரத்துக்காக வெட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் 1876-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரை ஏற்பட்ட கடும் பஞ்சத்தில், மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக வெட்டப்பட்டது. ஆகவே, திட்டமிட்டு வெட்டப்பட்ட கால்வாய் போல இது இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இது பெரும் பயன் உள்ள கால்வாயாக திகழ்ந்தது. தமிழ்நாடும், ஆந்திராவும் இக்கால்வாயால் பலவிதங்களில் பயன் பெற்றன. ஆனால் தற்போது இயற்கை பேரிடர்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் பக்கிங்காம் கால்வாய் அதன் அடையாளத்தை இழந்து, கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.

அதுபற்றி விரிவாக காண்போம்...

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து புலிகாட் ஏரி, எண்ணூர் மற்றும் மரக்காணம் வழியாக தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை, கடற்கரையையொட்டி ஒரு உப்புநீர் பயணவழி கால்வாயாக, 1806-ம் ஆண்டு பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயின் மொத்த நீளம் 467 கி.மீ. இதில் 210 கி.மீ. தமிழ்நாட்டிலும், மீதமுள்ள 257 கி.மீ. ஆந்திராவிலும் அமைந்துள்ளது.

முக்கிய நீர்வழிப்பாதை

பக்கிங்காம் கால்வாயில் ஆரணியாறு, கொரட்டாலியூர் ஆறு, ஓட்டேரி ஆறு, கூவம் ஆறு, அடையாறு மற்றும் பாலாறு ஆகிய ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளன. கடற்கரையோரம் உள்ள இயற்கையாக அமைந்த உப்பங்கழிகளை, சென்னை துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த கால்வாய் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவின் ஒரு முக்கியமான நீர்வழிப் பாதையாக இருந்தது.

பக்கிங்காம் கால்வாய் கட்டுவது குறித்த சிந்தனை 1782-ம் ஆண்டு முதலே தொடங்கியது எனலாம். அதனை முதலில் சிந்தித்தவர் ஸ்டீபன் போபம் என்பவராவார். காரணம், அந்த காலத்தில் எரிபொருளுக்கான விறகுகள் படகுகள் மூலம் எண்ணூருக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மாட்டு வண்டியில் சென்னைக்கு கொண்டு செல்லப்படும். இந்த இரண்டு நதிகளையும் இணைத்தால், மழைக்காலத்தில் தண்ணீர் இருக்கும், விறகுகளுடன் சென்னை வரை நேரடியாக படகுகள் வரலாம் என்று அவர் நினைத்தார்.

தெற்கு கால்வாய்

இதற்கிடையில், அடையாறு ஆற்றில் இருந்து மரக்காணம் ஏரி வரையில் தெற்கே செல்லும் மற்றொரு கால்வாயை அரசாங்கம் கட்டி, அதனை தெற்கு கால்வாய் என்று அழைத்தது. அதேசமயம் கிழக்கு கடற்கரை கால்வாயானது தற்போதைய சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே எழும்பூர் ஆற்றின் வழியாக கூவத்துடன் இணைந்தது. அதன்வழியாக அதற்கு தெற்கு கால்வாயுடன் ஒரு இணைப்பு அமைக்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் 1876-ம் ஆண்டு சென்னையில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி பசியால் வாடினர். அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த பக்கிங்காம் பிரபு மக்களுக்கு உணவளிப்பதாகக் கூறியதோடு, பதிலுக்கு அவர்கள் தெற்கு கால்வாய் மற்றும் கூவத்தை இணைக்கும் வகையில் ஒரு கால்வாயை தோண்டித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரே வருடத்தில், சென்னை பல்கலைக்கழகத்திற்குப் பின்புறம் தொடங்கி கிரீன்வேஸ் ரெயில் நிலையம் வரையிலான 5 மைல் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு போக்குவரத்து

அதன்பின்னர் பெத்தகஞ்சம் முதல் மரக்காணம் வரை உள்ள அனைத்து நீர்நிலைகளும் இணைக்கப்பட்டதாக, பயணவழிக் கால்வாயாக அமைக்கப்பட்டு பக்கிங்காம் கால்வாய் என்று அழைக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினாலே உருவானது தான் பக்கிங்காம் கால்வாய்.

ஒரு உப்பு நீர் கால்வாய் ஆக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய், நதிகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்கள் அருகே அலைக் கால்வாய் ஆக அமைக்கப்பட்டது. இக்கால்வாய் அதனுடைய முழு நீளத்திற்கும் கடற்கரையை ஒட்டியவாறு கடற்கரையில் இருந்து அரை கிலோமீட்டர் முதல் அதிகபட்சம் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. அதன் மூலம் கடல் நீரை கால்வாயில் நிரப்பி அதனை உள்நாட்டு போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.

கடலூர் வரை நீட்டிப்பு

மேலும், இக்கால்வாயை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து நீட்டித்து கடலூரில் கடற்கரையையொட்டி பரவனாறு மற்றும் வெள்ளாறு வழியாக பரங்கிப்பேட்டை வரையில் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இணைத்து தஞ்சாவூர், திருச்சி வழியாக கோயம்புத்தூர் வரையில் நீர்வழிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்ட பிறகு அப்பணிகள் நிறைவடையாமல் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆயினும் கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டையில் அமைந்திருக்கும் கால்வாயில் இன்னமும் தண்ணீர் பாய்ந்தோடுவதைக் காணலாம்.

படகு போக்குவரத்துக்காக பயன்பட்ட இந்த கால்வாய் கடந்த 1966 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் தாக்கிய புயல் விளைவாகவும், இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமலும் படகு போக்குவரத்து கைவிடப்பட்டது. மேலும் பல இடங்களில் கால்வாய் தூர்ந்து போனதாலும், கடலும் கால்வாயும் இணையும் இடம் அடைபட்டதாலும் கால்வாயில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தலைவர்கள் கால்வாயை புனரமைக்க பல்வேறு திட்டங்கள் தீட்டினாலும், அதனை செயல்படுத்தவில்லை. இதன் விளைவு, வரலாற்று புகழ்மிக்க பக்கிங்காம் கால்வாயை, கழிவுநீர் கால்வாயாக மாற்றிவிட்டது. ஆம், கடலூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் சுருங்கிப்போன கால்வாயில், கழிவுநீர் வழிந்தோடுகிறது. சில இடங்களில் கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு புதையுண்டு போயுள்ளது. அதனால் படகு போக்குவரத்து இனி தொடங்காவிட்டாலும், கடலூர் மாவட்டத்திற்கு ஒரு வடிகாலாக மாற்றி வரலாற்று சிறப்பு மிக்க பக்கிங்காம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

இத்திட்டம் பற்றி அறிந்த சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மழைவெள்ளம் புதைத்துவிட்டது

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சேதுராமன்:-

சுனாமி மற்றும் புயல், மழைவெள்ளம் பக்கிங்காம் கால்வாயைப் புதைத்துவிட்டது. பல ஆண்டுகளாக, குப்பைகள் மற்றும் சாக்கடைகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் அது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 31 கி.மீ நீளத்திற்கு சென்னை நகரின் வழியாக வளைந்து நெளிந்து செல்லக்கூடியதாக இருந்த அக்கால்வாய் இப்போது பல இடங்களில் முற்றிலும் தடுக்கப்பட்டு, சில இடங்களில் குறுக்கப்பட்டு கிடக்கிறது. மேலும், 1965-1966 மற்றும் 1976-ம் ஆண்டு ஏற்பட்ட புயல்கள் கால்வாயை முற்றிலும் சேதப்படுத்தின. அக்கால்வாய் தற்போது பராமரிக்கப்படவோ அல்லது பயன்படுத்தப்படவோ இல்லை.

இருப்பினும் கடந்த 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியின் போது, பெத்தகஞ்சம் முதல் சென்னை இடையேயான கடற்கரையோரத்தில் சுனாமி அலைகளுக்கு பக்கிங்காம் கால்வாய் ஒரு இடையகமாக செயல்பட்டு காத்தது. கால்வாய் சுனாமி அலை கொண்டுவந்த நீரால் நிரம்பியது, அது பத்து பதினைந்து நிமிடங்களில் மீண்டும் கடலுக்குள் சென்றது. அவ்வகையில் கடலோர ஆந்திரா மற்றும் சென்னை நகரத்தில் உள்ள பல மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற அக்கால்வாய் உதவியது.பக்கிங்காம் கால்வாய் மீண்டும் புனரமைக்கப்பட்டால் அது உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அத்தோடு நில்லாமல் அக்கால்வாயை ஆறுகள் தோறும் இணைத்து ஒரு முழுமையான நீர்வழிப் போக்குவரத்தை தமிழகத்தில் உருவாக்கினால், நீர் வழிப் பயணம், நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் போன்றவற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துகின்ற மகத்தான திட்டமாக அது அமையும்.

சுருங்கிப்போன கால்வாய்

பரங்கிப்பேட்டை அகரம் ரெயிலடியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பாஸ்கர்:-

பரங்கிப்பேட்டையில் உள்ள இந்த கால்வாய், 100 ஆண்டுகளுக்கு முன்பு பாய்மர கப்பல் சென்ற கால்வாயாகும். இதில் பரங்கிப்பேட்டையில் இருந்து பாய்மர கப்பல் மூலம் சென்னைக்கு சென்று வியாபாரம் செய்தார்கள். வணிகத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கிய இந்த கால்வாய் தற்போது சுருங்கி போய் உள்ளது. மேலும் படகு செல்லவே வழி இல்லாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு அரண்

பரங்கிப்பேட்டை முத்து:-

பக்கிங்காம் கால்வாய் தற்போது பராமரிப்பு இல்லாமல் முட்செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த கால்வாயை தூர்வாாி பராமாித்தால், மழை வெள்ள காலங்களில் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும். ஆனால் தற்போது இந்த கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததே, கால்வாய் தூா்ந்து போனதற்கு காரணம். அதனால் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்வாதாரம் மேம்படும்

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணன்: -

சென்னையில் மிகப்பெரிய பஞ்சம் வந்த போது, கவர்னராக இருந்த டியூக் பக்கிங்காம் மக்களுக்கு பசிப்பிணி போக்க, அவர்களுக்கு வேலை அளித்து கால்வாய் தோண்டினார். இந்த கால்வாய் கடலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பேக் வாட்டர்ஸ் மூலமாக ஏற்படுத்தப்பட்ட கால்வாயாகும். அடையாறு, கூவம் ஆறுகளுக்கு செங்குத்தாக இந்த கால்வாய் அமையப்பெற்றது மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

இக்கால்வாய் தமிழ்நாட்டில் 210 கிலோ மீட்டர் உருவாக்கப்பட்டது. அதாவது பரங்கிப்பேட்டை வரை போக்குவரத்து நடந்தது. தற்போது அந்த நீர்த்தடம் அழிந்து போய் உள்ளது. இந்த நிலையில் இந்த கால்வாய் மாசடைந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கால்வாயை சீரமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்த கால்வாயின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்றைக்கு சென்னையில் மொத்த கழிவுநீரில் 60 சதவீதம் அதில் தான் கலக்கிறது.

1937-ல் பாரதிதாசன் மயிலாப்பூரில் இருந்து மகாபலிபுரம் வரையில் படகில் இந்த கால்வாய் வழியாய் செல்லும்போது தான் அவருக்கு தோன்றிய அந்தக் காட்சிகளை வைத்து ஓடைப்பாட்டு என்ற நூலை எழுதியுள்ளார். இந்த கால்வாய் புனரமைக்கப்பட்டால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். கடலோர மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும்.

Tags:    

மேலும் செய்திகள்